உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூர் ககேடியோ பகுதியில் போட்டித் தேர்வுக்கான பயிற்சி மையம் ஒன்று இயங்கிவருகிறது. இந்த மையத்தில் எட்டாவாவைச் சேர்ந்த சிறுவர் ஒருவர் படித்து வந்துள்ளார். இந்த நிலையில், அந்தச் சிறுவர் கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதற்காக நண்பர்களிடம் ரூ.20 ஆயிரம் வரை கடன் வாங்கியுள்ளார்.
ஒருகட்டத்தில், அந்த 20 ஆயிரம் ரூபாய் தொகையையும் ஆன்லைனில் இழந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்தத் தொகையை நண்பர்கள் கேட்டுள்ளனர். அதற்கு அந்தச் சிறுவனோ, ‘தற்போது பணம் இல்லை; வேலைக்குப் போய் தந்துவிடுகிறேன்’ எனக் கூறியுள்ளார்.
இதைக் கேட்காத அவர்கள், அந்தச் சிறுவனைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். அடித்து உதைப்பதுடன் நிறுத்தாமல் தீ மூலம் அவரது தலைமுடியைப் பொசுக்கவும் முனைகின்றனர். மேலும், அவரது பிறப்புறுப்பில் செங்கல்லைக் கட்டித் தொங்கவிட்டும் கொடுமைப்படுத்துகின்றனர். அந்தச் சிறுவனோ, வலி தாங்க முடியாமல் கதறி அழுவதுடன், ‘என்னை விட்டுவிடுங்கள்’ எனக் கையெடுத்துக் கும்பிடுகிறார். இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுதொடர்பாக, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அந்த வீடியோ கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும் தப்பியோடிய நபர்களையும் போலீசார் தேடி வருகின்றனர். பணத்திற்காக, சிறுவனைக் கொடூரமாகத் தாக்கிய வீடியோ அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.