இந்தியா

சைனிக் பள்ளியில் மாணவிகள் : இந்திய வரலாற்றின் புதிய மைல் கல்..

சைனிக் பள்ளியில் மாணவிகள் : இந்திய வரலாற்றின் புதிய மைல் கல்..

webteam

மிசோரம் மாநிலத்தில் உள்ள சைனிக் பள்ளியில் 6 மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். 

சைனிக் பள்ளிகள் 1961ஆம் ஆண்டு இந்தியாவில் கொண்டுவரப்பட்டவை. இந்திய ராணுவத்தில் சேவை புரிய, இந்தியாவின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் இளைஞர்கள் தேவை என்பதற்காக அன்றைய இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் கே.வி.கிருஷ்ண மேனன் இந்த திட்டத்தை கொண்டுவந்தார். இந்திய பாதுகாப்புத்துறைக்கு மாணவர்களை தயார்படுத்துவதற்காக இந்தப் பள்ளி அப்போது நிறுவப்பட்டது. தற்போது 28 சைனிக் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இத்தனை ஆண்டுகளாக இந்தப் பள்ளிகள் மாணவிகளுக்கு இடமளிக்கப்படவில்லை. தற்போது முதல் முறையாக 6 பெண்களுக்கு இந்தப் பள்ளியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1992ஆம் ஆண்டு முதல் இந்திய பாதுகாப்புத்துறையில் பெண்களுக்கு இடமளிக்கப்பட்டது. 2016ஆம் மூன்று பெண்கள் இந்திய போர் விமானப்பயணிகளாக பொறுப்பெற்றனர். இதுதவிர பாதுகாப்புத்துறையின் பல்வேறு பொறுப்புகளிலும் பெண்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் பாதுகாப்புத்துறைக்கு மாணவர்களை தயார் படுத்தும் சைனிக் பள்ளிகளிலும் பெண்களை சேர்ப்பதற்கான ஒரு தொடக்கமாக, இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மிசோரோமில் உள்ள சைனிக் பள்ளியில் இந்த நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் மாணவிகள் சேர்க்கைக்கு தகுதித்தேர்வு நடத்தப்படுவதாக மிசோரோம் சைனிக் பள்ளியில் அறிவிக்கப்பட்டது. இதற்காக 31 மாணவிகளின் பெற்றோர் விண்ணப்பித்துள்ளனர். இதன்பின்னர் நடத்தப்பட்ட தகுதி தேர்வின் மூலம் 6 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு வகுப்புகள் தற்போது நடத்தப்பட்டு வருகின்றன. அந்த மாணவிகள் கூறும்போது, தங்களின் தந்தையைப் போலவே தாங்களும் நாட்டுக்காக சேவை செய்ய நினைப்பதாக தெரிவித்துள்ளனர்.