இந்தியா

’மகளே என்று அழைத்து...’: சின்மயானந்தாவின் பாலியல் வன்கொடுமை பற்றி மாணவி வாக்குமூலம்

’மகளே என்று அழைத்து...’: சின்மயானந்தாவின் பாலியல் வன்கொடுமை பற்றி மாணவி வாக்குமூலம்

webteam

சின்மயானந்தா தன்னை எப்படியெல்லாம் பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தினார் என்று சட்ட மாணவி வாக்குமூலம்  அளித்துள்ளார். 

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுவாமி சின்மயானந்தா, அவரது சட்டக்கல்லூரியில் படித்த மாணவி அளித்த பாலியல் வன்கொடுமை புகாரின்பேரில், கடந்த 20 ஆம் தேதி கைது
செய்யப்பட்டு ஷாஜகான்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரது உடல்நிலை மோசமானதை அடுத்து, லக்னோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சின்மயானந் தா தன்னை எப்படியெல்லாம் பாலியல் வன்கொடுமை செய்தார் என்பதை அந்த மாணவி போலீசாரிடம் வாக்குமூலமாக கூறி யுள்ளார். இதை த பிரின்ட் என்ற இணைய இதழ் வெளியிட்டுள்ளது. அந்த மாணவி கூறியிருப்பதாவது:

முதன்முதலாக அவரது அறைக்கு நான் அழைத்துச் செல்லப்பட்டபோது, தனது அருகில் அமரும்படி சொன்னார் சின்மயானந் தா. என் படிப்புக்காக பலமுறை அவர் அதற்கு முன் பாராட்டியிருக்கிறார். அதனால் அவரை பெரிய மனிதராகத்தான் பார்த்தேன். அப்போது, நான் உனக்கு ஒன்றை காண்பிக்கப்போகிறேன் என்றவர், அவரது செல்போனை பார்க்கச்
சொன்னார். அதில், நான் நிர்வாணமாகக் குளித்துக்கொண்டிருந்த வீடியோ ஓடியது. அதைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து அழத் தொடங்கினேன். அவர் சிரிக்கத் தொடங்கினார். 

’அழாதே, எனது தேவைகளை தீர்த்து வைத்தால் போதும், இதை வெளியே விடமாட்டேன். இல்லை என்றால் இந்த வீடியோ வைரலாகும். உனது குடும்பத்தினரையும் கொன்றுவிடுவேன்’ என்று மிரட்டினார். பிறகு நிர்வாண ஆயில் மசாஜ் செய்ய சொன்னார். மறுத்தேன். அடித்து உதைத்தார். தரையில் தள்ளி மிதித்தார். மிரட்டினார். எனக்கு வேறு வழி தெரியவில்லை. 

தினமும் காலை 6 மணிக்கு நிர்வாண மசாஜ். மதியம் 2.30 மணி அடித்துவிட்டால் எனக்குப் பயம் தொற்றிக்கொள்ளும். அந்த நேரத்தில் எனது கல்லூரி விடுதி அறைக்கு துப்பாக்கி ஏந்திய அவரது பாதுகாவலர்கள் வந்துவிடுவார்கள். என்னை பாதுகாப்பாக அழைத்துச் சென்று அவருக்கான தனியறையில் விடுவார்கள். அங்கு எனக்கு கொடுமைகள் தொடங்கும். சின்மயானந்தா என்னை பாலியல் வன்கொடுமை செய்வார். எதையாவது சாக்குச் சொல்லி தப்பிக்கப் பார்ப்பேன். எனக்கு மாதவிடாய் என்று சொன்னால் கூட விடமாட்டார். ஆசிரமத்தில் அவர் இருக்கும் ஒவ்வொரு முறையும் எனது இதயம் நொறுங்கும். இந்தக் கொடுமை தாங்க முடியாமல் பைத்தியமாகிவிட்டேன்.

என்னை, ’மகளே’ என்று அழைத்து இப்படி செய்வதை வழக்கமாக வைத்திருந்தார். என்னால் இது தொடர்வதை தாங்க முடியவில்லை. யாரிடம் சொன்னாலும் நம்பவில்லை. இதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டார்கள். பிறகுதான் எப்படி இதற்கு
ஆதாரத்தை திரட்டலாம் என நினைத்தேன். கூகுளில் தேடினேன். ரகசிய கேமராக்களை கொண்ட பேனா, மூக்கு கண்ணாடி, பிரேஸ்லெட்ஸ் உள்ளிட்ட பொருட்கள் பற்றி தெரிந்துகொண்டேன்.

அடுத்து, மூக்கு கண்ணாடிதான் சரியானது என்று முடிவு செய்தேன். மற்ற எதையும் அவர் அறைக்குள் எடுத்துச் செல்ல முடியாது என்பதால் அதை ஆன்லைனில் ஆர்டர் செய்தேன். பிறகு அவர் செய்யும் கொடுமைகளை வீடியோ எடுத்தேன். பிறகுதான் எனக்கு தைரியம் வந்தது. வீடியோ உட்பட மேலும் சில ஆதாரங்கள் கிடைத்த பின் விடுதியில் இருந்து தப்பினேன். இவ்வாறு அந்த சட்ட மாணவி தெரிவித்துள்ளார்.