இந்தியாவில் 50 நகரங்களில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 1ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா முழுவதும் அதிவேக 5ஜி சேவையைத் தொடங்கி வைத்தார். அதனையடுத்து இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ சேவையை இந்தியா முழுவதும் தொடங்கினர். முதற்கட்டமாக மும்பை, டெல்லி, கொல்கத்தா, வாரணாசி ஆகிய நான்கு நகரங்களில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 5ஜி சேவையை தொடங்கியது. பின்னர், தமிழகத்தில் சென்னை, ராஜஸ்தான் மாநிலத்தில் நத்வரா ஆகிய இரு பகுதிகளில் 5ஜி சேவையை விரிவுபடுத்தியது ஜியோ நிறுவனம்.
இதனையடுத்து, 5ஜி சேவை குறித்து கடந்த 7-ஆம் தேதி மக்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் , அக்டோபர் 1ம் தேதி முதல் 5ஜி தொலைதொடர்பு சேவை 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 50 நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறியிருக்கிறார்.
இந்தியாவில் உள்ள இரண்டு பெரிய தொலைதொடர்பு சேவை நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவை 5ஜி சேவைகளை அறிமுகப்டுத்தியுள்ளது. ஜியோவின் 5ஜி சேவை டெல்லி - என்சிஆர், மும்பை, கொல்கத்தா, வாரணாசி, சென்னை, பெங்களூரு, ஐதராபாத், புனே மற்றும் நாத்வாரா ஆகிய இடங்களில் கிடைக்கிறது. இதுபோக, ஜியோ நிறுவனம் சமீபத்தில் குஜராத்தின் 33 மாவட்ட தலைமையகங்களிலும் 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதேபோல, டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஐதராபாத், சிலிகுரி, நாக்பூர், வாரணாசி, பானிபட், குருகிராம், கவுகாத்தி மற்றும் பாட்னா ஆகிய நகரங்களில் ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி தொடங்கப்பட்டுள்ளது. தொலைதொடர்பு நிறுவனங்கள் தற்போது தங்கள் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் கட்டணமின்றி 5ஜி சேவையை வழங்குகிறது என அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்துள்ளார்.
இதுபோக, தொலைதொடர்புத் துறை அணுகல் அலைக்கற்றை ஏலத்திற்கான அறிவிப்பு அழைப்பு விண்ணப்பத்தில் அதன் கடமைகளை குறிப்பிட்டுள்ளததாவும், அணுகல் ஸ்பெக்ட்ரம் மற்றும் உரிமம் நிபந்தனைகளை ஏலம் விடும் அழைப்பிதலின் படி, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்பட்ட நாளிலிருந்து ஒரு கட்டமாக ஐந்தாண்டுகளுக்கு குறைந்தபட்ச வெளியீட்டு கடமைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் எழுத்துப்பூர்வமாக அஸ்வினி வைஷ்ணவ் பதிலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
செல்போன்கள் தயாரிப்பில் உலகிலேயே இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் செல்போன்களில் 25 முதல் 30 சதவிகிதம் 5ஜி தொழில்நுட்ப வசதி கொண்டவை. ஒவ்வொரு ஆண்டும் 5ஜி போன்களின் விலை குறைந்து வருகிறது. இன்னும் ஒரு வருடத்திற்குள் பெரும்பாலான செல்போன்கள் 5ஜி வசதி கொண்டதாக இருக்கும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.