53 மாத்திரைகள் தரமற்றவை முகநூல்
இந்தியா

காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட 53 மாத்திரைகள் தரமற்றவை? வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்!

பொதுமக்கள் காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட பிரச்னைகளுக்கு எடுத்து கொள்ளும் பாராசிட்டமால் உள்பட 53 மாத்திரைகள் தரமானதாக இல்லை என்று அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

PT WEB

மருந்துகளும் மாத்திரைகளும் நாடு முழுவதும் மக்கள் பயன்பாட்டுக்காக விற்பனைக்கு வரும் முன்பு, மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு, அவற்றை பரிசோதித்து, தரத்தை உறுதி செய்கிறது. இப்படியான ஒரு பரிசோதனை, கடந்த மாதம் நடத்தப்பட்டபோது, சளி, காய்ச்சல் உள்ளிட்டவற்றுக்காக பயன்படுத்தப்படும், 156 வகையான ஃஎப். டி.எஸ். (FDS or Fixed Dose Combination) வகையை சேர்ந்த மாத்திரைகள் தரமற்றவை என உறுதி செய்ததால், அவற்றை மத்திய அரசு அதிரடியாக தடை விதித்தது.

இந்த அதிர்ச்சியின் தொடர்ச்சியாக இன்னொரு பேரதிர்ச்சியும் இப்போது வெளியாகியுள்ளது. கால்சியம், வைட்டமின் D3, வைட்டமின் C குறைபாடு, சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தத்திற்கான மாத்திரைகள் உள்பட, 53 மாத்திரைகள் நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் இல்லை என்பது, அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் உறுதியாகியுள்ளது.

குறிப்பாக, வைட்டமின் சி, வைட்டமின் டி3 குறைபாட்டுக்கான ஷெல்கால் வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி குறைபாட்டுக்கான softgels, antiacid Pan-D, சர்க்கரை நோய்க்கான Glimepiride, உயர் ரத்த அழுத்தத்திற்கான Telmisartan உள்ளிட்ட மாத்திரைகளும் இந்த தரக்குறைபாடு பட்டியலில் இடம்பிடித்துள்ளன. வயிறு தொற்று பிரச்சனைக்கான மெட்ரோனிடாசோல், ஆன்டிபயோடிக்ஸ் மாத்திரையான Clavam 625, Pan D, குழந்தைகளுக்கான பாக்டீரியா தொற்றுக்கான ஹெட்டரோவின் செபோடெம் எக்ஸ்பி 50 மாத்திரைகளும் தரமற்று இருப்பதாக உறுதியாகியுள்ளன.

பாராசிட்டமால்

இதேபோல, பொதுமக்கள் வெகு சாதாரணமாக பயன்படுத்தும், கர்நாடகா அன்டிபயோடிக்ஸ் மற்றும் பார்மசூட்டிக்கல் லிமிடெட் நிறுவனத்தின், பாராசிட்டமால் மாத்திரையின் தரத்திலும் குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் குறைபாடுகள் பற்றி, மாத்திரை தயாரிப்பு நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை அந்த நிறுவனங்கள் ஏற்கவில்லை.