ஒடிசாவில் உள்ள மகாநதி ஆற்றில் 500 ஆண்டுகள் பழமையானது என்று நம்பப்படும் கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் உள்ளது நாயகர் நகரம். இந்த நகரத்தில் ஓடும் மகாநதி ஆற்றில் 500 ஆண்டுகள் பழமையானது என்று நம்பப்படும் கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1933 ஆம் ஆண்டில் வெள்ளத்தின்போது இந்தக் கோயில் நீரில் மூழ்கியதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட வெள்ளத்தால் நதி அதன் போக்கை மாற்றியதால், ஒரு கிராமமும் கோயிலும் நயாகரில் மூழ்கிப் போனதாகவும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
மேலும் இந்தியத் தேசிய கலை மற்றும் கலாச்சார பாரம்பரிய அறக்கட்டளையின் (INTACH) தொல்பொருள் ஆய்வுக் குழு, கோயிலின் முனை ஓரளவு வெளியே தெரியவந்த பின்னர்தான் சமீபத்தில் கண்டுபிடித்ததாகக் கூறியுள்ளது. இந்தத் துறையின் தலைவர் அனில் குமார் திர், செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ-க்கு இந்தக் கோயில் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர், "இந்தக் கோயிலுக்கு மிகப் பழமையான வரலாறு உள்ளது. இது சுமார் 450 முதல் 500 ஆண்டுகள் பழமையானது எனக் கணித்துள்ளோம்.
இந்தக் கோயிலில் இருந்து சிலை வேறொரு கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. மகாநதி பள்ளத்தாக்கை ஆவணப்படுத்தும் ஒரு திட்டத்தில் நாங்கள் பணியாற்றி வருகிறோம். எனவே நாங்கள் இந்தக் கோயிலைத் தேடிக்கொண்டிருந்தோம். ஒரு வாரத்திற்கு முன்பு கோயிலின் மேல் பகுதி தெரிகிறது என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆகவே நாங்கள் வந்து ஆய்வு செய்தோம் ”எனக் கூறியுள்ளார்.
மேலும் தொடர்ந்த அவர், "கோயில் ஒரு நல்ல நிலையில் உள்ளது. எங்களிடம் முறையான தொழில்நுட்பம் இருப்பதால் அதை மீண்டும் நிறுவுவோம். எங்களால் கண்டுபிடிக்கப்பட்ட நீரில் மூழ்கிய முதல் கோயில் இது அல்ல" என்றும் பேசியுள்ளார்.
55 முதல் 60 அடி வரையிலான இக் கோயில் 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலோ அல்லது 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலோ கட்டப்பட்டு இருக்கலாம் என்றும், இப்பகுதியில் சுமார் 65 கோயில்கள் நீருக்கடியில் உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.