கொல்கத்தா - மூத்த மருத்துவர்கள் கூண்டோடு ராஜினாமா எக்ஸ் தளம்
இந்தியா

கொல்கத்தா | தொடரும் உண்ணாவிரத போராட்டம்.. 50 மூத்த மருத்துவர்கள் கூண்டோடு ராஜினாமா!

பயிற்சி பெண் மருத்துவர் கொலை சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டி ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பணியாற்றும் 50-க்கும் மேற்பட்ட மூத்த மருத்துவர்கள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.

Prakash J

வடக்கு கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய பெண் முதுகலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கு குறித்து சிபிஐ தீவிரமாக விசாரணை நடத்திவருகிறது. இந்த விசாரணையில் சமூக ஆர்வலர் சஞ்ஜய் ராய், மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இந்த வழக்கில் நீதி வேண்டி அம்மாநில பயிற்சி மருத்துவர்கள், மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், மருத்துவர்களுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் பயிற்சி மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த அக்டோபர் 5ஆம் தேதி முதல் அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பயிற்சி பெண் மருத்துவர் கொலை சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டி ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பணியாற்றும் 50-க்கும் மேற்பட்ட மூத்த மருத்துவர்கள் கூண்டோடு இன்று ராஜினாமா செய்துள்ளனர்.

தங்கள் ராஜினாமா கடிதத்தில் அவர்கள், “கீழ் கையொப்பமிட்ட மருத்துவர்களான நாங்கள் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சேவையாற்ற பாடுபட்டு வருகின்றோம். ஆனால் தற்போதைய நிலைமைகள், எங்களுக்கு பல சவால்களை கொடுத்துள்ளன. தேவைப்படும் நோயாளிகளுக்கு தரமான சேவையை அளிப்பதற்கு சிரமமாக உள்ளது.

தற்போது உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது.

கூண்டோடு ராஜினாமா செய்த கொல்கத்தா மருத்துவர்கள்

காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அம்மருத்துவர்களின் நிலை மோசமடைவதை அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது போல உள்ளது. அரசு அம்மருத்துவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக சமரசம் செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இதை வலியுறுத்தி நாங்கள் அனைவரும் ஒன்றாக ராஜினாமா செய்கிறோம். சூழ்நிலை கோரினால் தனிப்பட்ட முறையிலும் ராஜினாமா செய்வோம்” என்றுள்ளார்.