இந்தியா

அவசர சிகிச்சைக்காக குவைத்தில் இருந்து விமானத்தில் இந்திய அழைத்துவரப்பட்ட சிறுமி 

அவசர சிகிச்சைக்காக குவைத்தில் இருந்து விமானத்தில் இந்திய அழைத்துவரப்பட்ட சிறுமி 

webteam
ஊரடங்கு காலத்தில் அவசர அறுவை சிகிச்சை செய்வதற்காகச் சிறுமி ஒருவர் குவைத்திலிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
 
உலகமே கொரோனா தொற்று காரணமாக முடங்கிப் போய் கிடக்கிறது. விமானச் சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாடுகளுக்கு இடையேயான அனைத்து போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரைச் சாலை வழியாக இயக்கப்படும் அனைத்து போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. மே 3 ஆம் தேதிவரை நீடிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் மக்கள் வீட்டுக்குள்ளாகவே தங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
 
 
இந்நிலையில், குவைத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமிக்கு அறுவைச் சிகிச்சை செய்வதற்காக விமானம் மூலம் இந்தியாவிற்கு அழைத்துவரப்பட்டுள்ளார். கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட இச் சிறுமியின் பெற்றோர் குவைத்தில் வசித்து வந்துள்ளனர். அச்சிறுமிக்குக் காதில் கட்டி ஏற்பட்டதை அடுத்து உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்தாக வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆகவே சிறுமி சாதிகா ரதீஷ்குமார், இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளார். அவருக்கு டெல்லியிலுள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) அவசர அறுவை சிகிச்சை நடக்க உள்ளது.  சிறுமி சாதிகாவை இந்திய அரசு நேற்று விமானத்தில் மூலம் ஏற்றி வந்துள்ளது. 
 
சிறுமி சாதிகா, நேற்று தனது தந்தையுடன் டெல்லியை அடைந்ததாக இந்திய விமானப்படை சார்பில் தெரிவித்துள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் அளித்த தகவலின்படி, சிறுமியின் காதில் கட்டி இருப்பதால் அவசர அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்பதற்காகவே அழைத்துவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
 
இந்தச் சிறுமியின் உறவினர்கள் இந்த முயற்சிக்கு நன்றி தெரிவிக்கும் வீடியோ பதிவு ஒன்றும் வெளியாகியுள்ளது. அதில் மேற்படி சிகிச்சைக்காக சிறுமியை இந்தியா அழைத்து வருவதற்கு முக்கிய பங்கு வகித்த மத்திய அமைச்சர் முரளீதரன் மற்றும் புது தில்லி எம்.பி. மீனாட்சி லேகி ஆகியோருக்கு இக்குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
 
மேலும் அந்த வீடியோவில், சாதிகாவின் மாமா “கடந்த சில நாட்களாக தூக்கமில்லாத இரவுகளைக் கழித்து வந்தோம்”என்று உணர்ச்சிவசப்பட்டுப் பேசியுள்ளார்.