அரசியல் ஆளுமைகள் ட்விட்டர்
இந்தியா

women’s day|‘ஒடிசாவின் மகள்’ முர்மு To திராவிடப் புதல்வி கனிமொழி! இந்திய அரசியலில் 5 பெண் ஆளுமைகள்!

ஆண்டுதோறும் மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினம் கொண்டாடாப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் அரசியல் துறையில் இன்றும் சாதித்துவரும் சில ஆளுமைகளை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

Prakash J

துறைகள் அனைத்திலும் துணிவுடன் போராடுபவர்கள் பெண்கள். இவர்களுடைய பெருமைகளையும் சாதனைகளையும் போற்றுவிதமாக ஆண்டுதோறும் மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினம் கொண்டாடாப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் அரசியல் துறையில் இன்றும் சாதித்துவரும் சில ஆளுமைகளை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

’ஒடிசாவின் மகள்’ திரௌபதி முர்மு:

இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றவர் திரௌபதி முர்மு. இவர் 2வது பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமைக்கும் உரியவர். 1958ஆம் ஆண்டு, ஜூன் 20ஆம் தேதி ஒடிசா மாநிலத்தில் பிறந்த இவர், புவனேஸ்வரில் கல்லூரிப் படிப்பை முடித்து, பள்ளி ஆசிரியையாக நீண்டகாலம் பணியாற்றினார். ஷ்யாம் சரண் முர்மு என்பவரைத் திருமணம் செய்துகொண்ட இவர், இரண்டு மகன், ஒரு மகள் என மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்தார். ஆனால், திருமணமான சில ஆண்டுகளிலேயே விபத்து ஒன்றில் தன்னுடைய கணவரை இழந்தார். அடுத்தடுத்து உடல்நலக்குறைவால் தன்னுடைய இரண்டு மகன்களையும் பறிகொடுத்தார்.

அதன்பிறகு ஆசிரியர் பணியை கைவிட்டு பாஜகவில் இணைந்தார். முதலில் பஞ்சாயத்துத் தேர்தலில் கவுன்சிலரான அவர், 2000-ம் ஆண்டு ஒடிசாவின் ராய்ரங்பூர் தொகுதியில் வெற்றிபெற்று எம்எல்ஏ ஆனார். தொடர்ந்து 2 முறை அதே தொகுதியில் (2000-2009) எம்.எல்.ஏவாகவும் தேர்வு செய்யப்பட்ட அவர், அம்மாநிலத்தில் அமைச்சராகவும் பணியாற்றினார். அதன்பிறகு, 2015ஆம் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக திரௌபதி முர்மு நியமிக்கப்பட்டார். இதன் மூலம் மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர் என்ற புகழை அடைந்தார். அதைத் தொடர்ந்து 2021ம் ஆண்டு வரை ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகப் பதவி வகித்தார். தற்போது குடியரசுத் தலைவராக உள்ளார்.

சக்திவாய்ந்த பெண்மணி சோனியா காந்தி

காங்கிரஸ் கட்சிக்கு உயிர்கொடுத்து தூக்கியவர்களில் சோனியா காந்தியும் ஒருவர். 1946ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி, இத்தாலியில் பிறந்த சோனியா காந்தியின் இயற்பெயர், எட்விஜ் அன்டோனியா அல்பினா மைனோ என்பதாகும். 1964ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜில் படித்துவந்த ராஜீவ் காந்திக்கும் (மறைந்த முன்னாள் பிரதமர்) சோனியாவுக்கும் காதல் உருவாகி, 1968இல் இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியுடன் வசித்துவந்தனர். இந்த தம்பதிக்கு ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி என்ற இரண்டு குழந்தைகள் பிறந்தன. அரசியலில் இருந்து விலகியே இருந்த ராஜீவ், அவரது சகோதரர் சஞ்சய் காந்தி இறந்த பிறகு, 1982இல் அரசியலில் காலடி எடுத்துவைத்தார். கட்சியில் இல்லை என்றாலும் 1984இல் கணவருக்காக பிரசாரம் மேற்கொண்டார், சோனியா. பின்னர் 1991ஆம் ஆண்டு, அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பிறகு, சோனியாவைப் பிரதமர் பதவி தேடிவந்த போதும், அவர் அதை ஏற்கவில்லை. அவரை பிரதமராக்க எதிர்ப்பும் கிளம்பியது.

பின்னர், 1996இல் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து, சோனியா காந்தி 1997ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் தன்னை உறுப்பினராக இணைத்துக்கொண்டார். அடுத்து 1998இல் அக்கட்சியின் தலைவரானார். 1999இல், முதல்முறையாக எம்பியான அவர், எதிர்க்கட்சித் தலைவராகவும் அமர்ந்தார். அதன்பிறகு 2004 மற்றும் 2009 ஆகிய தேர்தல்களிலும் வெற்றிபெற்று எம்பியானார். அவரது தலைமையில் காங்கிரஸும் ஆட்சியைப் பிடித்து மன்மோகன் சிங் பிரதமராக இருந்தார். ஆனால் அதற்குப் பிறகு 2014 பொதுத் தேர்தலில் ரேபரேலி தொகுதியில் சோனியா வெற்றி பெற்றாலும், அந்தத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்தது. உடல்நலம் காரணமாக காங்கிரஸ் கட்சி தலைமையில் இருந்து சில காலம் ஒதுங்கியிருந்த சோனியாவிற்குப் பிறகு ராகுல் காந்தி அக்கட்சிக்கு தலைமை ஏற்றார். பின்னர் அவரது தலைமையிலும் 2019ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி தோல்வியைச் சந்தித்த பிறகு, கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி நியமிக்கப்பட்டார். பின்னர், அக்கட்சியில் தேர்தல் நடத்தப்பட்டு மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், தொடர்ந்து உடல்நலத்தால் பாதிக்கப்பட்டு வந்த அவர், சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து முதல்முறையாக மாநிலங்களவைத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

’மேற்கு வங்க பெண் புலி’ மம்தா பானர்ஜி:

மேற்கு வங்கத்தின் அசைக்க முடியாத அரசியல் சக்தியாகப் பார்க்கப்படுகிறார் மம்தா பானர்ஜி. இவர் மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வராகவும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் அறியப்படுகிறார். 1955ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி பிறந்த மம்தா, 15 வயதிலேயே அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர். 1970இல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர், 1984ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான சோம்நாத் சாட்டர்ஜியைத் தோற்கடித்து முதன்முறையாக எம்பியானார். மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருந்த கம்யூனிஸ்ட் அரசை கடுமையாக விமர்சனம் செய்துவந்த மம்தா பானர்ஜிக்கு காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட அதிருப்தியால் அதிலிருந்து விலகி, 1997ஆம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கினார்.

மம்தா பானர்ஜி

2001 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டு 60 இடங்களில் வெற்றி பெற்றது. இதற்கிடையே மத்திய ரயில்வே அமைச்சராகவும் இருந்த மம்தா, பின்னாட்களில் தனக்கான அரசியல் களம் மேற்கு வங்கம்தான் என்பதை நன்றாக உணர்ந்தார். 2006ஆம் ஆண்டு கார் தொழிற்சாலைகளுக்கு விவசாயிகளிடமிருந்து நிலம் கையகப்படுத்தும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்த மம்தாவை நாடே திரும்பிப் பார்த்து. அந்தச் செல்வாக்குத்தான் அவரை 2011இல் மாநில முதல்வராக அரியணை ஏற்றியது. தவிர, 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த கம்யூனிஸ்ட் அரசுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. தற்போதும் முதல்வராய் இருக்கும் அவர், இந்தியாவில் தற்போதுள்ள ஒரே பெண் முதல்வர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரராக உள்ளார்.

பவர்ஃபுல் லேடி நிர்மலா சீதாராமன்!

தமிழகத்தின் தூங்கா நகரமான மதுரையில் 1959 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ஆம் நாள் பிறந்தவர், நிர்மலா சீதாராமன். பெரும்பாலும் இந்தியாவிலேயே கல்வி கற்ற அவர், திருமணத்திற்குப் பிறகு லண்டனுக்குக் குடிபெயர்ந்தார். பின்னர் இந்தியா திரும்பிய நிர்மலா சீதாராமன் பாஜகவில் ஐக்கியமானார். அவரது கணவர் (ஆந்திராவைச் சேர்ந்தவர்) குடும்பம் பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியைப் பின்தொடர்ந்து வந்தபோதும், தனது தனிப்பட்ட விருப்பம் காரணமாக நிர்மலா சீதாராமன் பாஜகவில் இணைந்தது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. 2006ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த நிர்மலா சீதாராமன், 2010ம் ஆண்டு அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார். 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் ’அத்வானியா.. மோடியா’ என்ற கேள்வி எழுந்தது. அப்போது மோடிக்காக அழுத்தமான குரலை பதிவுசெய்தவர் நிர்மலா.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

பின்னர் மோடியே பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதன்பின் மோடிக்காக தீவிர பிரசாரத்தில் இவர் ஈடுபட்டார். அவரின் குரல் நாடு முழுவதும் பதிவாகியது. மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி அமைந்தபிறகு, நிர்மலா சீதாராமனை இணையமைச்சராக ஆக்கப்பட்டர். அத்துடன் ஆந்திராவிலிருந்தும் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வுசெய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, 2017இல் அவர் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதன்மூலம், முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்குப் பிறகு முழுநேர பாதுகாப்புத் துறை அமைச்சராக பதவி வகித்த பெண் என்ற பெருமைக்கு உரியவரானார் நிர்மலா சீதாராமன். நிர்மலா சீதாராமன்தான் தமிழகத்தில் பாஜகவின் முதல்வர் வேட்பாளர், தமிழகத்தின் அடுத்த பாஜக தலைவர் என்றெல்லாம் தமிழகத்தோடு இணைந்து அவர் அடிக்கடி பேசப்பட்ட அவர், 2019-ல் மீண்டும் மாநிலங்களவை எம்.பி ஆக தேர்வு செய்யப்பட்டு பாஜக அரசில், நிர்மலா சீதாராமன் நிதியமைச்சகராகத் தேர்வுசெய்யப்பட்டார். அவர், கடந்த 5 ஆண்டுகளாக மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்த பெருமைக்குரியவராக இன்றும் புகழப்படுகிறார். இன்னொரு விஷயம், ஃபோர்ப்ஸ் இதழின் உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் நிர்மலா, தொடர்ந்து 5வது ஆண்டுகளாக இடம்பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திராவிடப் புதல்வி கனிமொழி

டெல்லி தேசிய அரசியல் தமிழக முகமாய் பார்க்கப்படுபவர் கனிமொழி. இவர் ஓர் அரசியல்வாதியாக மட்டுமல்ல, கவிஞராகவும் திரைப்பட பாடலாசிரியராகவும் தன் பயணங்களைப் பரிணமித்துக் கொண்டவர். ’கருவறை வாசனை’ எனும் கவிதைத் தொகுப்பு அவரை மிகச்சிறந்த நவீன கவிஞர்களில் ஒருவராக அடையாளம் காட்டியது. 2001-ஆம் ஆண்டு நள்ளிரவில் கருணாநிதி கைது செய்யப்பட்டார். அப்போது சென்னை சென்ட்ரல் அருகே இருந்த மத்திய சிறைச்சாலை வாசலில் தர்ணா போராட்டத்தில் கருணாநிதி ஈடுபட்டபோது அவருக்கு பக்கபலமாய் நின்ற கனிமொழியின் புகைப்படங்களை அவ்வளவு எளிதில் தமிழ் மக்களால் மறக்க முடியாது. 1968ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி பிறந்த அவர், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இலக்கியவாரிசாக வளர்ந்தவர், கனிமொழி.

MP kanimozhi

2001ஆம் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது, அவருக்கு ஆதரவாக தரையில் அமர்ந்தவர் கனிமொழி. அந்த புகைப்படங்கள் அப்போதே அவருக்கான அரசியல் தடத்தை ஏற்படுத்தி இருந்தன. அதன்பயனாக, 2007ஆம் ஆண்டு முதன்முறையாக மாநிலங்களவை உறுப்பினரானார், கனிமொழி. தொடர்ந்து 2013லும் மாநிலங்களவைக்குத் தேர்வானார். இரண்டு முறை மாநிலங்களவைக்குத் தேர்வான கனிமொழி, முதல்முறையாக 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடியில் நின்று வெற்றிபெற்றார். அந்த தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தற்போதைய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனைவிட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். பாஜகவின் கொள்கைகளுக்கும் செயல்களுக்கும் எதிராகக் குரல் கொடுக்கும் கனிமொழி, தமிழகத்தின் சார்பில் தலைநகரைத் திரும்பிப் பார்க்கும் வெற்றிப் பெண்ணாக இன்றும் வலம்வருகிறார்.