இந்தியா

மீண்டும் மறியல் போராட்டத்தில் குதித்த குஜ்ஜார் சமூகத்தினர் - 5 ரயில்கள் ரத்து

மீண்டும் மறியல் போராட்டத்தில் குதித்த குஜ்ஜார் சமூகத்தினர் - 5 ரயில்கள் ரத்து

webteam

ராஜஸ்தானில் குஜ்ஜார் சமூகத்தினர் இடஒதுக்கீடு கேட்டு மீண்டும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 5 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் 15 ரயில்கள் வேறு வழித்தடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

ராஜஸ்தானில் குஜ்ஜார் சமூகத்தினர், தங்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி 2007ம் ஆண்டிலிருந்து சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அடிக்கடி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தது.

இதையடுத்து குஜ்ஜார் சமூகத்தினருக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என 2017ல் ராஜஸ்தான் அரசு வாக்குறுதி அளித்தது. மேலும் நாடாளுமன்றத்தில் மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த மசோதாவிற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதனால் மசோதாவை நிறுத்திவைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதால் இடஒதுக்கீடு விவகாரம் தொடர்ந்து இழுபறியாகவே உள்ளது.

இந்நிலையில், குஜ்ஜார் சமூகத்தினர் மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். அரசு வாக்குறுதி அளித்தபடி, 5 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, மீண்டும் ரயில்  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

டெல்லி-மும்பை ரயில் பாதையில், சவாய் மதோபூர் மாவட்டம் மக்சுதன்புரா என்ற இடத்தில் நேற்று ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. குஜ்ஜார் சமூகத்தினர் ஏராளமானோர் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 7 ரயில்கள் மாற்று பாதையில் அனுப்பப்பட்டன. 

இதைத்தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 5 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் 15 ரயில்கள் மாற்றுப் பாதையில் அனுப்பப்பட்டுள்ளன.  

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்றும்போது, ஏன் எங்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற முடியாது என குஜ்ஜார் சமூகத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் தங்களுக்கு நல்ல முதலமைச்சர் மற்றும் பிரதமர் வேண்டும் எனவும் தங்களின் கோரிக்கைகளுக்கு அவர்கள் பதிலளிக்க வேண்டும் எனவும் குஜ்ஜார் சமூகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

இதுகுறித்து குஜ்ஜார் சமூகத்தின் தலைவர் கிரோரி சிங் பைன்ஸ்லா கூறுகையில்,  “எங்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும். எங்களது வேண்டுகோளுக்கு அரசு பதிலளிக்கவில்லை. அதனால் மறியல் போராட்டத்தில் ஈடுபடுகிறோம்” எனத் தெரிவித்தார்.

ராஜஸ்தான் அரசு போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ரகு சர்மா, விஸ்வேந்திர சிங், மாஸ்டர் பன்வார்லால் ஆகிய 3 அமைச்சர்கள் கொண்ட குழுவை நியமித்துள்ளது.