டெல்லி குருகிராம் செக்டார் 90ல் உள்ள லாஃபோரெஸ்டா என்ற ஹோட்டல் உள்ளது. இந்த ஹோட்டலுக்கு கடந்த மார்ச் 2ஆம் தேதி, அங்கித் குமார் என்பவர் தனது மனைவி மற்றும் நண்பர்களுடன் சாப்பிடுவதற்காகச் சென்றுள்ளார். அப்போது அவர்கள் சாப்பிட்டு முடித்த பின்பு, வாய் புத்துணர்ச்சி பெறுவதற்காக, அங்கிருந்த mouth freshenerஐ எடுத்து உபயோகித்துள்ளனர். அதை உபயோகித்த அவரது குடும்பத்தினர் அனைவரும் வாயில் ஏற்பட்ட எரிச்சலால் அவதிப்பட்டு உள்ளனர். அதில் பெண் ஒருவர், ‘எரிகிறது’ என்று திரும்பத் திரும்பக் கூச்சலிடுகிறார். அதில் ஒருத்தர் ரத்த வாந்தி எடுத்தார். இந்த வீடியோதான் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
அவர்கள் வலியால் துடிப்பதைப் பார்த்த ஒருவர், இங்கு அனைவரும் வாந்தி எடுத்தனர். அவர்களின் நாக்கில் கீறல்கள் இருந்தன. எரிச்சலால் அவஸ்தைப்பட்டனர். அவர்களுக்கு என்ன கொடுக்கப்பட்டது என தெரியவில்லை. அதில் ஒருத்தர் என்னை போலீஸுக்கு போன் பண்ணச் சொன்னார்” எனத் தெரிவித்துள்ளார்.
பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. புகாரின்பேரில் கைப்பற்றப்பட்ட அந்த mouth freshenerஐ எடுத்துக் கொண்டுபோய் மருத்துவரிடம் காட்டியுள்ளனர். அவர் அதைப் பார்த்துவிட்டு, ’இது மரணத்திற்கு வழிவகுக்கும் அமிலம்’ எனத் தெரிவித்துள்ளார். தற்போது இதனால் பாதிக்கப்பட்ட அந்த 5 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் இருவர் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் உணவகத்தின் உரிமையாளர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.