அசோக் கெலாட் pt web
இந்தியா

மாட்டுச்சாணம் ரூ.2க்கு கொள்முதல்.. ராஜஸ்தானில் காங்கிரஸ் அளித்த 5 முக்கிய தேர்தல் வாக்குறுதிகள்!

ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் அம்மாநிலத்தின் காங்கிரஸ் கட்சி பல்வேறு முக்கிய வாக்குறுதிகளை அளித்துள்ளது.

Angeshwar G

ஐந்து மாநில தேர்தல் நவம்பர் 7 ஆம் தேதி முதல் நவம்பர் 23 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் ராஜஸ்தான் மாநிலத்திற்கான தேர்தல் நவம்பர் 23 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களுக்காக நவம்பர் 25 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3 அன்று நடைபெறும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவிற்கும் இடையே நேரடிப்போட்டி நிலவுகிறது. இரு தரப்பும் மாறி மாறி வாக்குறுதிகளை அளித்த வண்ணம் உள்ளன. பிரச்சாரங்களும் முழுவேகத்தில் மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் முதலமைச்சர் அசோக் கெலாட் ராஜஸ்தான் மக்களுக்கு பல்வேறு முக்கிய வாக்குறுதிகளை அளித்துள்ளார். ஜெய்ப்பூரில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வரும் தேர்தலில் தனது அரசு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் முன்மொழியப்படுள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.

அவர் அளித்துள்ள வாக்குறுதிகளாவன,

காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை உறுதிப்படுத்த சட்டம் இயற்றுவோம்.

தனது அரசு 1 கோடி பெண்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு இலவச இணைய சேவையுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை வழங்கும்.

ஒவ்வொரு மாணவ மாணவியருக்கும் ஆங்கில வழிக்கல்விக்கு உத்தரவாதம் அளிக்கப்படும்.

முதலாம் ஆண்டு அரசுக் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இலவச லேப்டாப் மற்றும் டேப்லட் வழங்கப்படும்.

அரசே மாட்டுச்சாணத்தை ரூ.2க்கு கொள்முதல் செய்யும்.

இயற்கை பேரிடர் காலத்தில் ஏற்படும் இழப்புகளுக்கு ரூ.15 லட்சம் காப்பீட்டுத் தொகை போன்ற பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.

ஜூன்ஜூனூவில் பிரியங்கா காந்தி கலந்துகொண்ட பேரணியின் போது மேலும் இரண்டு வாக்குறுதிகளை அளித்தார்.

1.05 கோடி குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.500க்கு மானிய விலையில் வழங்கப்படும்.

குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் கவுரவத் தொகையாக வழங்கப்படும்

என தெரிவித்தார்.

ஏற்கனவே காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அளித்திருந்த வாக்குறுதியான விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்யப்படும் என்ற வாக்குறுதி உரிய நேரத்தில் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார்.