பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா(PFI) தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கேரளாவைச் சேர்ந்த 5 ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுக்கு Y பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. PFI-ஐ மத்திய அரசு தடை செய்தததை தொடர்ந்து, கேரளாவில் உள்ள RSS தலைவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது எனத் தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) தகவல் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து உள்துறை அமைச்சகம், தேசிய புலனாய்வு அமைப்பு, புலனாய்வுப் பணியகம் (IB) ஆகியவற்றின் அறிக்கையின் அடிப்படையில், தென் மாநிலத்தின், 5 RSS தலைவர்களுக்கு "Y" பிரிவு பாதுகாப்பை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பை உறுதி செய்யத் துணை ராணுவப் படைகளின் கமாண்டோக்கள் நிறுத்தப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் பிஎஃப்ஐ உறுப்பினர் முகமது பஷீரின் வீட்டிலிருந்து ஐந்து ஆர்எஸ்எஸ் தலைவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை என்ஐஏ சோதனையின் போது,கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே நாடு முழுவதும் இரண்டு சுற்றுச் சோதனைகளை நடத்தி 100க்கும் மேற்பட்ட PFI உறுப்பினர்களைக் கைது செய்திருக்கும் நிலையில் நாடு முழுவதும் உள்ள மத்திய அமைப்புகள் மற்றும் மாநில காவல்துறை, இப்போது PFI அமைப்பின் உறுப்பினர்களின் கணக்குகளை முடக்கவும், அதன் சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும் அனுமதி பெற்று இருக்கிறார்கள்.