புது டெல்லியில் துக்லகாபாத் பகுதியில் புதன்கிழமை காலை சாலையோரத்தில் நிறுத்தி இருந்த ஆட்டோ ரிக்ஷாவுக்குள் மலைப்பாம்பு ஒன்று படுத்திருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காலையில் ஆட்டோவை எடுக்கச் சென்ற ஓட்டுநர் சி.என்.ஜி சிலிண்டர் மேல் பாம்பு ஒன்று படுத்திருப்பதை கவனித்திருக்கிறார். அருகிலிருந்தவர்கள் வனவிலங்கு தன்னார்வ தொண்டு நிறுவனத்தைத் தொடர்பு கொண்டுள்ளனர். உடனே மீட்புக்குழுவிலிருந்து 2 பேர் தேவையான மீட்பு உபகரணங்களுடன் அந்த இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். பாம்பை எளிதாக பிடிக்க சிலிண்டர் மேலிருந்த உலோகத்தை அகற்றியுள்ளனர்.
ஒருமணிநேர முயற்சிக்குப் பின், பாம்பை பாதுகாப்பாகப் பிடித்து காட்டுப்பகுதியில் விட்டுவிட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி வனவிலங்கு எஸ்.ஓ.எஸ் தொண்டு நிறுவனத்தின் சி.இ.ஓ கார்த்திக் சத்யநாராயண், “ஒரு பாம்பைப் பிடிப்பது என்பது சவாலான விஷயம். பயிற்சி பெற்றவர்களால் மட்டுமே அதை செய்யமுடியும். நகர்ப்புறங்கள் போன்ற சவாலான இடத்திற்கு இந்த 5 அடி பாம்பு வந்திருக்கிறது. எங்கள் குழுவைச் சேர்ந்த பயிற்சி பெற்ற நிபுணர்கள் சாமர்த்தியமாக அந்த பாம்பைப் பிடித்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.