இந்தியா

குஜராத்: பால் அதிகம் சுரக்க எருமைகளுக்கு தடை செய்யப்பட்ட ஆக்ஸிடாஸின் ஊசி! சிக்கிய 5 பேர்

Veeramani

குஜராத் மாநிலம் பனஸ்கந்தாவின் பாலன்பூர் கிராமத்தில் எருமைகளின் பால் உற்பத்தி திறனை அதிகரிக்க தடை செய்யப்பட்ட ஆக்ஸிடாஸின் ஊசியைப் பயன்படுத்தியதற்காக ஐந்து பால்பண்ணை உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பால் உற்பத்தியை அதிகரிக்க கால்நடை பண்ணைத் தொழிலில் தவறாகப் பயன்படுத்தப்பட்டதால், 2018 ஆம் ஆண்டு முதல் சில்லறை விற்பனைக்கு ஆக்ஸிடாஸின், ஷெட்யூல் எச் மருந்துகளை மத்திய அரசு  தடைசெய்தது.

சுற்றுலாப் பயணிகள் சுரபி திரிபாதி மற்றும் ரூபினா ஐயர் ஆகியோர் பாலன்பூரில் உள்ள ஒரு சில பால் பண்ணைகளுக்கு  சென்றபோது இந்த மோசடி கண்டறியப்பட்டது. ரூபினா ஐயர் விலங்குகள் நலனுக்காகச் செயல்படும் SPCA சங்கத்தின் உறுப்பினராக உள்ளார். இவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் காவல்துறை , உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறை மற்றும் கால்நடை மருத்துவர்கள் குழுக்கள் ஐந்து பால் பண்ணைகளில் சோதனை நடத்தி பல ஆக்ஸிடாஸின் மற்றும் சிரிஞ்ச் பாட்டில்களை கைப்பற்றினர்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக கோட்லா கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் ஜூடல், அசோக் ஜூடல் மற்றும் நரேஷ் ஜூடல் மற்றும் சதோதர் கிராமத்தைச் சேர்ந்த இம்ரான் மகனோஜியா மற்றும் ஆரிப் மகனோஜியா ஆகியோர் மீது  ஐபிசி 429 இன் பிரிவு மற்றும் விலங்குகளுக்கு எதிரான கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரும் தங்கள் பண்ணையில் சராசரியாக 10-12 எருமைகளை வைத்திருக்கிறார்கள்.



இது தொடர்பாக பேசிய ரூபினா, "நாங்கள் தொடர்பு கொண்ட பால் பண்ணை உரிமையாளர்கள் உள்ளூர் மருந்து கடையில் இருந்து மிக எளிதாக தடை செய்யப்பட்ட ஆக்ஸிடாஸின் உள்ளிட்ட மருந்துகளை வாங்கி, பால் கொடுப்பதை நிறுத்திய எருமைகளுக்கு உணவளிப்பதாக கூறினார்கள். இத்தகைய மருந்துகள் விலங்குகளுக்கு மட்டுமல்ல, அவற்றின் பாலை உட்கொள்ளும் மனிதர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன”என்று கூறினார்.