முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் புதிய தலைமுறை
இந்தியா

"செமினார் அரங்குக்கு அருகேஉள்ள அறைகளை புனரமைக்க உத்தரவிட்டது ஏன்?"-மருத்துவர் கொலையில் தீவிர விசாரணை

கொலை தொடர்பாக மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷிடம் சிபிஐ அதிகாரிகள் 4 ஆவது நாளாக விசாரணை நடத்தினர்.

PT WEB

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் கொலை தொடர்பாக மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷிடம் சிபிஐ அதிகாரிகள் 4 ஆவது நாளாக விசாரணை நடத்தினர்.

இவ்வழக்கில் கைதாகி உள்ள சஞ்சய் ராயிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. கடந்த 9 ஆம்தேதி கொல்கத்தாவில் உள்ள பழமையான மருத்துவமனையில், பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவத்தில் அங்கு போராட்டங்கள் தொடர்கின்றன.

மாநில அரசு மருத்துவமனைகளில் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்வதால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. புறநோயாளிகள் பிரிவில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், கொலை நடந்த மருத்துவக்கல்லூரியின் முன்னாள் முதல்வர் டாக்டர் சந்தீப் கோஷிடம் சிபிஐ அதிகாரிகள் 4 ஆவது நாளாக விசாரணை நடத்தினர்.

செமினார் அரங்குக்கு அருகே உள்ள அறைகளை புனரமைக்க உத்தரவிட்டது ஏன்? என்பது உள்ளிட்ட கேள்விகளுடன் விசாரணை நடைபெற்றது. அவரிடம் நான்கு நாட்களாக தினமும் 12 மணி நேரத்திற்கும் மேலாக விசரணை நடத்தப்பட்டுள்ளது. சந்தீப் கோஷின் வாட்ஸ்அப் உரையாடல்களும் ஆய்வு செய்யப்படுகின்றன. சந்தீப் கோஷ் தெரிவித்த சில தகவல்கள் மற்றவர்கள் தெரிவித்த தகவல்களிலிருந்து வேறுபட்டு இருப்பதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிபிஐ அதிகாரிகள் மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் நேரில் ஆய்வு நடத்தியதுடன் மாதிரிகளையும் சேகரித்துள்ளனர்.

இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராயிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். குற்றம் நடந்தபோது அவர் தனியாகத் தான் இருந்தாரா அல்லது வேறு யாரும் இருந்தனரா என்பதை கண்டறியும் முயற்சியை அதிகாரிகள் எடுத்துள்ளனர்.

கொல்கத்தா காவல்துறையில் இவ்வழக்கை விசாரித்த அதிகாரிகளையும் சிபிஐ அதிகாரிகள் சந்தித்து விசாரணை குறித்த விவரங்களை கேட்டுப் பெற்றனர்.

இதற்கிடையில் சஞ்சய் ராயிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த விசாரணை நடத்துவதற்கான தேதியை முடிவு செய்யவில்லை என சிபிஐ அதிகாரிகள் கூறினர். இந்நிலையில், மத்திய அரசு நடத்தும் மருத்துவமனைகளில் பாதுகாவலர்களின் எண்ணிக்கையை 25% அதிகரிக்க சுகாதார அமைச்சகம் அனுமதித்துள்ளது.