இந்தியா

கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு 48 மணிநேர கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

kaleelrahman

கேரளாவில் மழை சற்றே குறைந்திருந்தாலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களுக்கு அதி கன மழைக்கான 'ஆரஞ்ச் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கேரளாவில் இதுவரை இந்த கன மழைக்கு 23 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அதில், நிலசரிவில் சிக்கி மட்டும் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இடுக்கி, கோட்டயம் மாவட்டத்தின் கொக்கயாறு, பூவஞ்சி, மாக்கோச்சி, பிலாபள்ளி, காவாலி, கூட்டிக்கல், பகுதிகளில் நிலசரிவில் சிக்கி 21 பேர் உயிரிழந்தனர். பூவந்தி என்னும் இடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து குழந்தைகள் உட்பட 7 பேர்; உயிரிழந்துள்ளனர். மண்ணுக்குள் புதைந்த உடல்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் உள்ளூர் தீயணைப்புத் துறை மற்றும் போலீசார் உதவியுடன் மீட்டுள்ளனர்.

இந்நிலையில், நாளையும், நாளை மறுநாளும் கொல்லம், இடுக்கி, பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, காசர்கோடு, வயநாடு, கண்ணூர், மலப்புரம் ஆகிய 11 மாவட்டங்களுக்கு அதி கன மழைக்கான 'ஆரஞ்ச் அலர்ட்' எச்சரிக்கை விடுத்து திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு செய்துள்ளது. இதர மாவட்டங்களிலும் கனமழை தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதோடு வரும் 24ம் தேதி வரை கேரளாவில் பரவலாக கனமழை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.