மகாராஷ்டிரா மாநிலத்தில் 40 வயது பெண் ஒருவர் எதிர்பாராத விதமாக, 20 செமீ நீளமுள்ள டூத் பிரஷை விழுங்கி இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது..
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், 40 வயதான பெண் ஒருவர் எப்பொழுதும்போல காலையில் எழுந்து பல் துலக்க சென்றுள்ளார். பல் துலக்கி கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக, 20 செமீ நீளமுள்ள டூத் பிரஷை விழுங்கியுள்ளார். இதனையடுத்து, டி.ஒய்.பாட்டீஸ் மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு அப்பெண்ணின் வயிற்றில் எந்த காயமும் ஏற்படுத்தாமல் பிரஷ்ஷை வெற்றிகரமாக மருத்துவர்கள் வெளியில் எடுத்துள்ளனர். இதுபோன்ற சம்பவம் நிகழ்வது மகாராஷ்டிராவின் முதல் முறையாகும். இது மகராஷ்டிரா மருத்துவர்களிடையே பெரும் வியப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அந்த மருத்துவமனையின், இரப்பைக்குடலியல் நிபுணரும் உதவி பேராசிரியருமான அபிஜீத் கராட் கூறுகையில், “நோயாளி உள்ளே வந்தபோது, அவள் தற்செயலாக 20 செமீ டூத் பிரஷ்ஷை முழுவதுமாக விழுங்கிவிட்டதை அறிந்து நாங்கள் ஆச்சரியமடைந்தோம். முதலில் அது சாத்தியமற்றதாகத் தோன்றியது. உலகளவில் டூத்பிரஷ் உட்கொள்வது மிகவும் அரிதானது. 30 க்கும் குறைவான சம்பவங்களே பதிவாகியுள்ளன.
உலகளவில், இத்தகைய நிகழ்வுகள் ஸ்கிசோஃப்ரினியா, புலிமியா அல்லது பசியின்மை போன்ற மனநல கோளாறுகள் உள்ள நோயாளிகள்தான் செய்வார்கள். ஆனால், இந்த விஷயத்தில், அந்த பெண்ணுக்கு எந்த பாதிப்பும் இல்லை. மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறார். இது இந்த வழக்கை மேலும் ஆச்சரியப்படுத்துகிறது. பிரஷ் அகற்றப்பட்டதற்கு பிறகும் அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் வியப்பினை ஏற்படுத்தியுள்ளது.