இந்தியா

உ.பி தேர்தலில் போட்டியிட காங்கிரஸில் பெண்களுக்கு 40% வாய்ப்பு

உ.பி தேர்தலில் போட்டியிட காங்கிரஸில் பெண்களுக்கு 40% வாய்ப்பு

sharpana

உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் 40 விழுக்காடு பெண்களாக இருப்பார்கள் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அதிகாரத்தில் பெண்களின் பங்கு கணிசமாக இருக்க வேண்டும். சாதி, மத அடிப்படையில் இல்லாமல் தகுதி அடிப்படையில் மட்டுமே இந்த வாய்ப்பு வழங்கப்படும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 403 இடங்களில் பாரதிய ஜனதா 312 இடங்களில் வென்று ஆட்சியைப்பிடித்த நிலையில் காங்கிரஸ் கட்சி 7 இடங்களில் மட்டுமே வென்றது.

இந்நிலையில், நாட்டில் அரசியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் இழந்த செல்வாக்கை மீட்க காங்கிரஸ் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகளும் கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி தலைமையில் உத்தரப்பிரதேசத்தில் கட்சிக்கு புத்துயிர் ஊட்டும் பணிகள் நடந்து வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்து 32 ஆண்டுகள் ஆவது குறிப்பிடத்தக்கது.