கேரளா - கிணற்றில் தவறிவிழுந்து சிறுவன் மரணம் புதிய தலைமுறை
இந்தியா

கேரளா: கொடி தழைகளால் மூடப்பட்ட குளம்; தவறிவிழுந்த சிறுவன்... சோகத்தில் முடிந்த சம்பவம்

சீர்செய்யப்படாத குளத்தில் தவறிவிழுந்த சிறுவன் இறந்த செய்தி அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Jayashree A

கேரளாவின் தொடுபுழாவைச் சேர்ந்த வைஷ்ணவ் மற்றும் ஷாலு தம்பதியின் நான்கு வயது மகன் தீரவ். இவர் கூவகண்டம், முண்டாட்டுசுண்டா பகுதியில் இருக்கும் தனது பாட்டி ஜான்சியுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை 11.30 மணியளவில் பாட்டி ஜான்சி வயல்வெளிக்கு சென்றுள்ளார். இவருடன் சிறுவன் தீரவும் சென்றுள்ளார். அப்போது தீரவின் தாத்தா ஷாஜி வயலில் தென்னை நடுவதற்கு சென்றுள்ளார்.

அந்த வயல்வெளியை சுற்றி அடர்ந்த காட்டுப்பகுதியாக இருந்துள்ளது. அதற்கு நடுவில் பூமாலை என்ற ஒரு குளம் இருந்துள்ளது. இந்த குளமானது கொடி தழைகளினால் மூடப்பட்டு இருந்துள்ளது. இந்நிலையில் ஜான்சி தனது பேரனை அருகில் இருக்கும் தென்னை மரத்தடியில் இருக்கச்சொல்லிவிட்டு, மாட்டை கட்டி வர சென்றுள்ளார். இச்சமயத்தில் குளக்கரைக்கு சென்ற தீரவ், தவறி குளத்தில் விழுந்துள்ளார்.

மாட்டை கட்டிவிட்டு வந்த ஜான்சி தான் விட்டு சென்ற இடத்தில் சிறுவனைக் காணாததால், சிறுவனைத் தேடிக்கொண்டு வீட்டிற்கு சென்று இருக்கிறார், அங்கும் சிறுவன் இல்லாததால், சந்தேகத்துடன் குளக்கரைக்கு வந்து பார்க்கும்பொழுது, சிறுவன் தீரவின் செருப்பு குளத்தின் தண்ணீரில் மிதந்துள்ளது. அதைக்கண்டதும் ஜான்சி அலறியுள்ளார்.

அவரின் அலறல் சத்தத்தைக்கேட்ட அக்கம்பக்கத்தினர், சிறுவனைக் காப்பாற்ற குளத்தில் இறங்கியுள்ளனர், ஆனால் குளத்தின் ஆழம் அதிகமாக இருந்ததால், வெளியேறிய அவர்கள் ஒரு கயிற்றின் உதவியுடன், சிறுவனை கட்டி மேலே எடுத்துவந்தனர்.

கிடைக்கப்பெற்ற சிறுவனின் செருப்புகள்

உடனடியாக் சிறுவனை அருகில் உள்ள தொடுபுழா மாவட்ட மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் சிறுவன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.