ஜம்மு காஷ்மீரில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலத்தின் அருகே தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 2 பேர் வீர மரணமடைந்தனர்.
பாராமுல்லா மாவட்டத்தில் குல்மார்க் என்ற சுற்றுலாத் தலத்தின் அருகே, ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள போடாபத்ரி என்ற இடத்தில், ராணுவ வாகனத்தைக் குறி வைத்து, தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் ராணுவ வீரர்கள் 2 பேர் வீர மரணமடைந்தனர். ராணுவத்தில் சுமை தூக்கும் பணியை மேற்கொண்டிருந்த கிராமத்தினர் 2 பேரும் சுட்டுக் கொல்லப் பட்டனர். மேலும் 4 பேர் காயமுற்றனர். தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு ராணுவத்தினர் பதிலடி கொடுத்தனர். தாக்குதலில் ஈடுபட்டது, பாகிஸ்தானைச் சேர்ந்த பிரிவினைவாத குழுக்களாக இருக்கலாம் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்தத் தாக்குதல் துரதிருஷ்டவசமானது என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜம்மு - காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.