சபரிமலையில் இருமுடி கட்டி வந்த திருநங்கைகளுக்கு தலைமை தந்திரி அனுமதி அளித்ததையடுத்து அவர்கள் கோயிலில் தரிசனம் செய்தனர்.
சபரிமலை பக்தர்கள் வருகையால் தமிழக கேரள எல்லையை இணைக்கும் குமுளி, தேக்கடி பகுதிகள் களைகட்டியுள்ளன. சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட விவகாரத்தால் ஐயப்ப பக்தர்களின் வருகை மிகவும் குறைவாக இருந்தது. தற்போது ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக தமிழக கேரள எல்லையை இணைக்கும் குமுளி வழியாக வந்து செல்லும் ஐயப்ப பக்தர்கள் கூட்டத்தால் குமுளி, தேக்கடி கடை வீதிகள் களை கட்ட துவங்கியுள்ளன.
இந்நிலையில், கேரளாவின் எர்ணாகுளம், கோட்டயம், கொல்லம் பகுதிகளைச் சேர்ந்த அவந்திகா, அனன்யா, திப்தி, ரேஞ்சுமோல் ஆகிய நான்கு திருநங்கைகள் இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்வதற்காக எருமேலிக்கு சென்றனர்.
கடந்த 16 ஆம் தேதி அவர்களை அங்கிருந்த ஐயப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தியதால், பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் திருநங்கைகளை திருப்பி அனுப்பினர்.
இதையடுத்து திருநங்கைகள் 4 பேரும் கேரள காவல்துறையிடமும், சபரிமலை நிலவரத்தை ஆய்வு செய்ய கேரள உயர்நீதிமன்றம் நியமித்த குழுவிடமும் மனுவாக எழுதிக் கொடுத்தனர். இதனையடுத்து திருநங்கைகள் 4 பேரும் சபரிமலை கோயிலில் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.
மேலும் தலைமை தந்திரியும் அனுமதி அளித்தார். அதன்படி திருநங்கைகள் நான்கு பேரும் இன்று நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.
கருப்பு சேலை அணிந்து, தலையில் இருமுடி கட்டுடன் சென்ற திருநங்கைகள் 18ஆம் படி வழியாகச் சென்று சாமி தரிசனம் செய்தனர். சபரிமலையில் தரிசனம் செய்ததன் மூலம் தங்களுக்கு விமோசனம் கிடைத்துள்ளதாகவும், தங்கள் வாழ்வில் இது மிகவும் மகிழ்ச்சிகரமான நாள் இது என்றும் திருநங்கைகள் தெரிவித்தனர்.