4ம் கட்ட வாக்குப்பதிவு புதிய தலைமுறை
இந்தியா

சந்திரபாபு நாயுடு முதல் அல்லு அர்ஜூன் வரை.. நாடு முழுவதும் பரபரப்பாக நடக்கும் 4ம் கட்ட வாக்குப்பதிவு

மக்களவைத் தேர்தலில் நான்காம் கட்டமாக 96 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், அரசியல்கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் தங்களது வாக்கினை செலுத்தினர்.

PT WEB

இன்று நாடு முழுவதும் நான்காம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. அதில் உத்தரப்பிரதேசத்தில் 13 தொகுதிகள், மகாராஷ்டிராவில் 11 தொகுதிகள், மத்தியப்பிரதேசம், மேற்குவங்கத்தில் தலா 8 தொகுதிகள், பீகாரில் 5, ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசாவில் தலா 4 தொகுதிகளுக்கும், ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

3 ஆம் கட்ட தேர்தல் -வாக்கு சதவீதம்

அத்துடன் ஆந்திர பிரதேசத்தில் உள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், ஒடிசாவில் 28 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

நான்காம் கட்ட மக்களவைத் தேர்தலில் 1,717 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்தத் தேர்தலில் 17.7 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக 1.92 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களின் வசதிக்காக குடிநீர், கழிவறை, மின்விசிறி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதில் ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடைபெற்று வரும் நிலையில், அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கடப்பாவில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினர்.

தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு குண்டூரிலும், முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ஜூப்ளி ஹில்லிஸ் வாக்குச்சாவடியிலும் வாக்களித்தனர். திரிபுரா ஆளுநர் இந்திரசேனா, ஐதராபாத் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஓவைசி, பாஜக வேட்பாளர் மாதவி லதா, திரைத்துறை பிரபலங்களான ஜூனியர் என்.டி.ஆர், அல்லு அர்ஜூன், சிரஞ்சீவி உள்ளிட்டோரும் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

அதேப் போன்று தெலங்கானாவில் உள்ள செகந்தராபாத்தில் மத்திய அமைச்சரும், பாஜக வேட்பாளருமான கிஷான் ரெட்டி, ஷாஜகான்பூரில் உத்தர பிரதேச அமைச்சர் சுரேஷ் கன்னா, பீகாரில் பாஜக அமைச்சர் கிரிராஜ் சிங் உள்ளிட்டோரும் வாக்களித்தனர்.

ActorAlluArjun

ஒடிசா மாநிலத்தில் உள்ள நபரங்பூர் மக்களவைத் தொகுதியில் பசுமை வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. ஒடிசாவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. நான்கு மக்களவைத் தொகுதிகளுக்கும், 147 சட்டப்பேரவைத் தொகுதிகளில் முதற்கட்டமாக 28 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதற்காக வாக்குச்சாவடிகளில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், தண்டமுண்டா கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தின் நுழைவு வாயிலில் செடிகள் வைக்கப்பட்டு பச்சை பசேல் என காட்சியளிக்கிறது. மேலும் பானைகளில் குடிநீர் வைத்து, பிளாஸ்டிக் உபயோகத்தை தடுக்கும் வகையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாக்குச்சாவடியை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது.