விபத்து நடந்த இடம் pt web
இந்தியா

கேரளாவில் ரயில்மோதி 4 தமிழர்கள் உயிரிழப்பு.. தண்டவாளத்தை சுத்தம் செய்தபோது நேரிட்ட சோகம்

கேரள மாநிலம் பாலக்காடு அருகே ரயில்வே மேம்பால பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, எக்ஸ்பிரஸ் ரயில் மோதி தமிழகத்தைச் சேர்ந்த 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

PT WEB

செய்தியாளர் மனு

கேரள மாநிலம் பாலக்காடு அருகே ஷோரணூரில் உள்ள பாரதப்புழா ஆற்றின் ரயில்வே மேம்பாலத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ரயில்வே மேம்பாலத்தில் தண்டவாளத்தை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, எக்ஸ்பிரஸ் ரயில் மோதி தமிழகத்தைச் சேர்ந்த 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சேலம் மாவட்டத்தை சேந்த வள்ளி, ராணி, லட்சுமணன் மற்றும் மேலும் ஒரு நபர் என மொத்தம் 4 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் நால்வரும் ஒப்பந்தத் தொழிலாளர்கள். இவர்கள் வேலையில் ஈடுபட்டிருந்தபோது விபத்து நிகழ்ந்துள்ளது. விரைவு ரயிலைப் பொருத்தவரை ஷோரணூர் பகுதியில் நிறுத்தம் கிடையாது. எனவே அதிவேகமாக சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மூவரது உடல் மீட்கப்பட்ட நிலையில், ஒருவரது உடலைத் தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

ரயில் சென்றபோது ஊழியர்கள் கவனக் குறைவாக நின்றிருக்கலாம் எனவும் இதன்காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் ரயில்வே காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். ஆனாலும் விசாரணை என்பது நடைபெற்று வருகிறது.