ஹரியானாவில் அதிக அளவிலான வெடிபொருட்களை கொண்டு சென்ற நான்கு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டநிலையில், அவர்களுக்கும் பாகிஸ்தான் பயங்கரவாதிக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
ஹரியானா மாநிலம் கர்னால் மாவட்டத்தில், பஞ்சாப், ஹரியானா காவல்துறை மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது, பஸ்தாரா சுங்கச் சாவடி அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த கார் ஒன்றை தடுத்து நிறுத்தினர். நாட்டுத் துப்பாக்கிகள், 3 இரும்பு கண்டெய்னர்களில் வெடிபொருட்கள், 31 வெடிமருந்துகள் மற்றும் ஒரு லட்சத்துக்கும் அதிக பணத்துடன் காரில் இருந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
குர்பிரீத், அமந்தீப், பர்மிந்தர் மற்றும் பூபிந்தர் ஆகிய இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பாகிஸ்தானில் பதுங்கி உள்ள ஹர்வீந்தர் சிங் என்ற தீவிரவாதியுடன் இவர்கள் 4 பேருக்கும் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து ஃபெரோஸ்பூருக்கு ட்ரோன் மூலம் வெடிபொருட்கள் அனுப்பப்பட்டதாகவும் அவற்றை தெலங்கானா மாநிலம் அடிலாபாத்தில் கொண்டுசேர்க்க பாகிஸ்தான் தீவிரவாதி கூறியதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக மகாராஷ்ட்ரா மாநிலம் நாந்தேடு என்ற இடத்திற்கு வெடிபொருட்களைக் கொண்டு சேர்த்ததும் தெரியவந்துள்ளது. நாட்டின் முக்கிய நகரங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனரா என்ற ஐயம் வலுவடைந்துள்ள நிலையில், பிடிபட்ட நான்குபேரிடம் நடத்தப்படும் விசாரணைக்குப்பிறகே முழு விவரம் தெரியவரும் என ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.