Tragedy pt desk
இந்தியா

கர்நாடகா: விஷமாக மாறிய கறிக்குழம்பு - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு.. விபரீத முடிவா?

கர்நாடக மாநிலத்தில் சப்பாத்தி, கறிக்குழம்பு சாப்பிட்ட ஒரே குடும்பத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

webteam

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

கர்நாடக மாநிலம், ராய்ச்சூர், சிரவாராவின் கல்லூரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பீமண்ணா (60) ஈரம்மா (54) தம்பதியர். இவர்களுக்கு மல்லம்மா (23), பார்வதி (16), ஆகிய இரண்டு மகள்களும், மல்லேஷ் (19) என்ற மகனும் இருந்தனர். இவர்கள், நேற்றிரவு வீட்டில் சமைத்த ஆட்டுக்கறி குழம்பும், சப்பாத்தியையும் சாப்பிட்டுவிட்டு உறங்கச் சென்றனர்.

Hospital

இந்நிலையில், சிறிது நேரத்தில் இவர்கள் வாந்தி மற்றும் வயிற்று வலியால் துடித்துள்ளனர். இதையறிந்த அக்கம் பக்கத்தினர், அவர்களை ராய்ச்சூரின் ரிம்ஸ் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த பீமண்ணாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது மனைவி, மகள் பார்வதி, மகன் மல்லேஷ் ஆகியோர் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர். மற்றொரு மகள் மல்லம்மா, கோமா நிலைக்குச் சென்றுள்ளார்.

இதுகுறித்து ராய்ச்சூர் மாவட்ட ஆட்சியர் நிதீஷ் கூறுகையில்... கோமா நிலையில் உள்ள மல்லம்மாவை காப்பாற்ற முயற்சிக்கிறோம். முதற்கட்ட விசாரணையில், இவர்கள் சாப்பிட்ட உணவில் விஷத்தன்மை இருப்பது தெரிந்தது. அதன் மாதிரியை ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளோம். அக்கம் பக்கத்தினரை விசாரித்த போது, குடும்ப பிரச்னையால் இவர்கள் உணவில் விஷம் கலந்து, தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சிலர் உணவில் பல்லி விழுந்திருக்கலாம் என்கின்றனர். தடயவியல் அறிக்கை வந்த பின்னரே, எதுவும் தெளிவாக தெரியும். பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்துகின்றனர் என தெரிவித்தார். இநத சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.