பிறந்து நான்கே மாதங்கள் ஆன பச்சிளம் குழந்தையை மாடியில் இருந்து குரங்கு ஒன்று தூக்கி வீசியதில் அந்தக் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள டங்கா கிராமத்தைச் சேந்தவர் நிர்தேஷ் உபத்யாய. இவருக்கும், ரேஷ்மி என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில், கடந்த மார்ச் மாதம் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், நேற்று இரவு நிர்தேஷும், மனைவி ரேஷ்மியும் குழந்தையை தூக்கிக் கொண்டு மூன்று அடுக்குகளைக் கொண்ட தங்கள் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றனர். பின்னர் அங்கு சிறிது நேரம் அவர்கள் நடந்து கொண்டிருந்தனர். அப்போது 10 - 15 குரங்குகள் திடீரென மாடிக்கு வந்தன. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த தம்பதியர், குரங்குகளை விரட்ட முற்பட்டனர். ஆனால் குரங்குகள் நிர்தேஷை சூழ்ந்து கொண்டன. இதையடுத்து, மாடியில் இருந்து நிர்தேஷ் கீழே இறங்கி ஓடிய போது அவரது கையில் இருந்த 4 மாத பச்சிளம் குழந்தை கீழே விழுந்தது.
அதை அவர் குனிந்து எடுப்பதற்குள் அங்கிருந்த ஒரு குரங்கு, கண்ணிமைக்கும் நேரத்தில் குழந்தையை தூக்கி மாடியில் இருந்து கீழே வீசியது. இதில் நிகழ்விடத்திலேயே குழந்தை உயிரிழந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பரேலியில் குரங்குகள் அதிக அளவில் இருக்கின்றன. இந்த குரங்குகள் அடிக்கடி வீடுகளுக்குள் நுழைவதும், அங்குள்ளவர்களை தாக்குவதும் தொடர்கதையாக உள்ளது. அதுமட்டுமல்லாமல், வீடுகளில் இருக்கும் பொருட்கள் உள்ளிட்டவற்றையும் குரங்குகள் சேதப்படுத்தி வருவதாக பரேலி மக்கள் புகார் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த குரங்குகளை வனப்பகுதிகளில் விடுவதற்கு மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அவ்வாறு செய்திருந்தால், இன்று ஒரு பச்சிளம் குழந்தை உயிரிழந்திருக்காது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.