செய்தியாளர்: ம.ஜெகன்நாத்
கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மங்களூர், குடகு, சிக்கமங்களூர், ஷிமோகா, பல்லாரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இரவு முழுவதும் கொட்டித் தீர்த்த கன மழையால் மங்களூர் மாவட்ட உள்ளலா தாலுகா குத்தாரு மதினா பகுதியில் அபுபக்கர் என்பவர் வீட்டின் சுற்றுச் சுவர் இடிந்து பக்கத்தில் உள்ள யாசிர் என்பவரது வீட்டின் மீது விழுந்துள்ளது.
இதில், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த யாசிர் (45), அவரது மனைவி மரினா (40), மகள்கள் ரிஹானா (11), ரிப்பானா (17) ஆகிய நான்கு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் அப்பகுதி மக்களுடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மூன்று மணி நேரம் போராடி இடிபாடுகளில் சிக்கியிருந்த 4 பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து உள்ளலா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுவர் இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.