UP Police File Image
இந்தியா

உ.பி: பட்டியலின குடும்பங்களை ஊரைவிட்டு வெளியேற நிர்பந்திக்கும் பாஜக தலைவர்!

உத்தரப் பிரதேசத்தில் நான்கு பட்டியலின குடும்பங்களை ஊரைவிட்டு வெளியேறும்படி பாஜக நிர்வாகி தொல்லை கொடுத்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

Justindurai S

உத்தரப் பிரதேசம் மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் உள்ள தேவ்ராலா கிராமத்தைச் சேர்ந்தவர் அச்சன் குமார் (27). பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவர் டூ-விலர் மெக்கானிக் வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டின் அருகே பாஜக நிர்வாகி சுரேந்திர பிரமுக் என்பவர் வீடு உள்ளது.

கடந்த மே 14ஆம் தேதி காலையில், அச்சன் குமாரின் குழந்தை பாஜக நிர்வாகி சுரேந்திர பிரமுக் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்துள்ளது. அப்போது சுரேந்திர பிரமுக் அச்சன் குமாரின் குழந்தையை அடித்ததாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்த அச்சன் குமாரின் தந்தை விஜேந்திர சிங், பாஜக நிர்வாகி சுரேந்திர பிரமுக்கிடம் குழந்தையை ஏன் அடிக்கிறீர்கள் எனத் தட்டிக் கேட்டுள்ளார்.

Shikarpur police station

அதேநாளில் மாலையில் அச்சன் குமார் மற்றும் அவரது உறவினர் சச்சின் கெளதம் (25) ஆகிய இருவரும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தபோது, பாஜக நிர்வாகி சுரேந்திர பிரமுக் உட்பட சுமார் 10 பேர் சேர்ந்து அவர்கள் இருவரையும் வழிமறித்து சரமாரியாக அவர்களை தாக்கி உள்ளனர். செங்கற்கள், கம்புகளைக் கொண்டு தாக்கியதில் அச்சன் குமார் மற்றும் சச்சின் கெளதம் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். தலையில் காயமடைந்த அச்சன் குமார் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து இச்சம்பவம் குறித்து அச்சன் குமார் ஷிகர்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தபோது முதலில் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை என சொல்லப்படுகிறது. விவகாரம் பெரிதான பிறகே சுரேந்திர பிரமுக் உள்ளிட்ட 8 பேர் மீது கொலை முயற்சி, கலவரம் மற்றும் கிரிமினல் மிரட்டல் ஆகிய ஐபிசி பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்தனர். ஆனால் சுரேந்திர பிரமுக் மீது வழக்குப்பதிவு செய்ததைக் கண்டித்து சுமார் 40 பேர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

Harassed by BJP leader

இச்சூழலில், தேவ்ராலா கிராமத்தில் அச்சன் குமாரின் குடும்பம் உள்ளிட்ட நான்கு பட்டியலின குடும்பங்களை ஊரைவிட்டு வெளியேறும்படி சுரேந்திர பிரமுக் தொல்லை கொடுத்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனைக் கண்டித்து பாதிக்கப்பட்ட பட்டியலின மக்கள் தங்கள் வீட்டின் சுவர்களில், சுரேந்திர பிரமுக்கின் ஆதரவாளர்களால் தங்கள் துன்புறுத்தப்பட்டு வருவதாக கைப்பட எழுதிய போஸ்டரை ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டரை போலீசார் அகற்றினர். இதுகுறித்து அச்சன் குமாரின் தந்தை விஜேந்திரா கூறுகையில், "நாங்கள் அச்சத்தில் வாழ்கிறோம். இப்போது எங்கள் வீட்டை காலி செய்து வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்'' என்கிறார்.

இச்சம்பவம் தொடர்பாக ஷிகர்பூர் காவல் நிலைய ஆய்வாளர் காமேஷ் குமார் கூறுகையில், "தேவ்ராலா கிராமத்தைச் சேர்ந்த பூரா சிங், பப்லூ குமார் மற்றும் கௌதம் குமார் ஆகிய 3 பேர் (சுரேந்திர பிரமுக்கின் ஆதரவாளர்கள்) கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணை நடந்து வருகிறது. இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் பலர் விரைவில் கைது செய்யப்படுவார்கள்" என்றார்.