எம்.பிக்கள் சஸ்பெண்ட் புதியதலைமுறை
இந்தியா

மக்களவை வரலாற்றில் 46 எம்பிக்களை இடைநீக்கம் செய்து மோடி அரசு சாதனை: மதுரை எம்.பி சு.வெங்கடேசன்

யுவபுருஷ்

நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கம் எழுப்பி வந்தனர். இந்த நிலையில், திமுகவின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் டி.ஆர் பாலு பாலு உட்பட மற்றும் காங்கிரஸ் கட்சியின் அதிர் ரஞ்சன் சௌத்ரி உள்ளிட்ட மக்களவை 33 மக்களவை உறுப்பினர்கள் அதிரடியாக இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த கூட்டத்தொடர் முழுவதும் இவர்களை இடைநீக்கம் செய்வதாக மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரும் வெள்ளிக்கிழமை முடிவடைய உள்ள நிலையில், ஏற்கனவே திமுகவின் கனிமொழி மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாணிக்கத்தாக்கூர் உள்ளிட்ட 13 மக்களவை உறுப்பினர்கள் இதே காரணத்துக்காக சென்ற வாரம் இடைநீக்கம் செய்யப்பட்டனர். மக்களவை நடவடிக்கைகளை முடக்கியதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்யக்கூடாது. என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது எனவும் சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

மக்களவை வளாகம் மற்றும் மக்களவை உறுப்பினர்களின் பாதுகாப்பு சபாநாயகர் கையில் உள்ளது என்றும் ஓம்பிர்லா தெரிவித்துள்ளார். இதனால் மத்திய உள்துறை அமைச்சரிடம் இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது. இந்த பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பிய விவகாரத்தில், ஏற்கனவே 13 எதிர்க்கட்சி எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரம் தொடர்பாக X தளத்தில் பதிவிட்ட எம்.பி சு.வெங்கடேசன், “நாடாளுமன்றத்தில் நடந்த அத்துமீறல் குறித்து உள்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வலியுறுத்தியதற்காக, இன்று மீண்டும் 33 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மக்களவை வரலாற்றில் 46 எம்பிக்களை இடைநீக்கம் செய்து புதிய சாதனை படைத்துள்ளது மோடி அரசு. நாளை இன்னொரு நான்கு எம்பிக்களை இடைநீக்கம் செய்து அரைசதத்தை எதிர்பார்க்கலாம்” என்று பதிவிட்டுள்ளார்.