இந்தியா

“வெறும் நடிப்புக்காக மட்டுமல்ல” - புனித் நினைவிடத்தில் தினந்தோறும் 30,000 பேர் அஞ்சலி

“வெறும் நடிப்புக்காக மட்டுமல்ல” - புனித் நினைவிடத்தில் தினந்தோறும் 30,000 பேர் அஞ்சலி

கலிலுல்லா

புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் தினந்தோறும் 30,000க்கும் மேற்பட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

''புனித்ராஜ்குமார் என் மனதுக்கு நெருங்கிய நடிகர். எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். என் முதல் மகனுக்கு கூட அவரது பெயரையே வைத்திருக்கிறேன்'' என்கிறார் சிவகுமார். தனது இரண்டு மகன்களுடன் புனித் ராஜ்குமார் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் அஞ்சலி செலுத்தியவர் கண்ணீருடன் கூறுகிறார்.
ஏறக்குறைய புனித்ராஜ்குமார் இறந்து 10 நாட்களாகிவிட்டது. அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வரும் ரசிகர்களின் கூட்டம் என்பது குறையவேயில்லை.

கொட்டும் மழையிலும் கண்டீவராவில் இறுதி அஞ்சலிக்காக ரசிகர்கள் கூட்டம் அலைமோதிக்கொண்டுதான் இருக்கிறது. கர்நாடக மாநில ரிசர்வ் போலீஸ் உள்பட 300க்கும் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 12 மணி நேர ஷிப்ட்களின் அடிப்படையில் அவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

தொழிலதிபரான சிவக்குமார் தனது மகன்கள் புனித் மற்றும் ஜீவித் ஆகியோருடன் புனித்ராஜ்குமார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த ஒரு மணி நேரமாக காத்துக்கொண்டிருக்கிறார். தனது இளைய மகனை தோளில் சுமந்துகொண்டு வரிசையில் நின்றுகொண்டிருப்பவர், ''நான் புனித் ராஜ்குமாரின் மிகப்பெரிய ரசிகன். வெறும் அவரது நடிப்புக்காக மட்டுமல்ல;

மாறாக சமூகத்தை நோக்கிய அவரது உதவியும், எளிமையும் என்னை ஈர்த்துவிட்டது'' என்றார். புனித்ராஜ்குமார் நினைவிடத்திற்கு நாள்தோறும் சுமார் 30ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அஞ்சலி செலுத்த வருகின்றனர். பல்வேறு வயதுக்குட்பட்டவர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர் என்கிறார்கள்.