இந்தியா

அசாம்: கொரோனா டெஸ்ட் எடுக்காமல் விமான நிலையத்தில் இருந்து "எஸ்கேப்" ஆன 300 பேர்

அசாம்: கொரோனா டெஸ்ட் எடுக்காமல் விமான நிலையத்தில் இருந்து "எஸ்கேப்" ஆன 300 பேர்

jagadeesh

அசாம் மாநிலம் சில்சார் விமான நிலையத்தில் இருந்து 300 பயணிகள் கட்டாய கொரோனா பரிசோதனையில் இருந்து தப்பியது தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3.14 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நாட்டில் இதுவரை 1,59,30,965 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் மொத்தம் 2,104 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு மாநிலங்கள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

இதனால் நாடு முழுவதும் விமான நிலையங்களில் வந்து இறங்கும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதன்கிழமை அசாம் மாநிலத்தின் சில்சார் விமான நிலையத்துக்கு 300 பயணிகள் வந்திறங்கினர். ஆனால் அவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனையை மேற்கொள்ளாமல் தவிர்த்து தப்பியுள்ளனர். இது குறித்து கச்சார் மாவட்டத்தின் கூடுதல் துணை ஆணையர் சுமித் சத்தாவன் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்தார்.

அதில் "புதன்கிழமை மட்டும் சில்சார் விமான நிலையத்துக்கு 6 விமானங்கள் வந்திறங்கியது. மொத்தம் 690 பயணிகள் வருகை தந்தனர். அதில் ஒரு 300 பேர் கட்டாய கொரோனா பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்து விமான நிலையத்தில் இருந்து வெளியேறிவிட்டனர். ஒரு பரிசோதனைக்கு ரூ.500 வசூலிக்கப்படுகிறது. அந்தக் கட்டணத்தை கொடுக்க முடியாது என தெரிவித்துவிட்டனர்" என்றார்.

இப்போது அம்மாநில போலீஸார் அந்த 300 பேரின் விவரங்களை சேகரித்து அவர்களை கண்டுப்பிடித்து நடவடிக்கை எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.