இந்தியா

300 மவோயிஸ்டுகள்... 99 ரிசர்வ் படையினர்... எப்படி நடந்தது தாக்குதல்?

300 மவோயிஸ்டுகள்... 99 ரிசர்வ் படையினர்... எப்படி நடந்தது தாக்குதல்?

Rasus

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தின் தெற்கு பகுதியில் உள்ள கலா பாத்தர் என்ற இடத்தில் சாலை போடும் பணிக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 74-வது பட்டாலியன் படைப்பிரிவை சேர்ந்த வீரர்கள் பாதுகாப்பு அளித்து வந்தனர். அப்போது நக்சலைட்டுகள் பாதுகாப்பு படை வீரர்கள் மீது நடத்திய தாக்குதலில் 25 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இது குறித்து பேசிய காயமடைந்த வீரர் ஷெர் முகமது என்பவர் இந்த தாக்குதல் சம்பவம் எப்படி நடந்தது என விளக்கியுள்ளார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 99 வீரர்களை ஆயுதம் தாங்கிய சுமார் 300 நக்சலைட்டுகள் தாக்கியதாக அவர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு படை வீரர்கள் எந்தெந்த இடத்தில் இருக்கிறார்கள், என்ன ஆயுதங்கள் வைத்திருக்கிறார்கள் என தெரிந்துக்கொள்ள அந்த கிராமத்தில் உள்ளவர்களை நக்சலைட்டுகள் முதலில் வேவு பார்க்க அனுப்பியுள்ளனர்.

பாதுகாப்பு படை வீரர்களில் ஒரு பிரிவினர் உணவு உண்ண சென்ற போது, பாதுகாப்பில் ஈடுப்பட்டிருந்த மற்றொரு பிரிவினரிடம் கிராம மக்களை பேச்சு கொடுக்க சொல்லி அவர்களையும் திசை திருப்பினர். பின்னர், நக்சலைட்டுகள் கிராம மக்களை மனித கேடயமாக பயன்படுத்தி துப்பாக்கியால் சுட அரம்பித்தனர். கிராம மக்களை மனித கேடயமாக பயன்படுத்தியதால் எங்களால் உடனடியாக துப்பாக்கிகளை பயன்படுத்த முடியவில்லை என ஷெர் முகமது கூறினார்.

இந்த தாக்குதலில் ஈடுப்பட்டிருந்த நக்சலைட்டுகள் குழுக்களாக பிரிந்து தாக்கியதாகவும், கருப்பு நிற உடை அணிந்திருந்த அவர்கள் பாதுகாப்பு படையை விட அதிக ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும் ஷெர் முகமது கூறியுள்ளார். இந்த தாக்குதலில் 10-க்கும் மேற்பட்ட நக்சல்கள் கொல்லப்பட்டதாகவும் ஆனால் அவர்களின் சடலங்கள் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்திய நக்சலைட்டுகள் அவர்களின் AK-47 துப்பாக்கிகளையும் எடுத்து சென்றுள்ளனர். இந்த தாக்குதலில் நக்சலைட்டுகள் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களும் முன்பு நடந்த தாக்குதலின் போது பாதுகாப்பு படையினரிடமிருந்து எடுத்து சென்றவையே எனவும் தெரிய வந்துள்ளது.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து, 3,00,000 வீரர்களை கொண்ட மத்திய ரிசர்வ் போலீஸ் படை இரண்டு மாதத்திற்கும் மேலாக தலைமை இல்லாமல் இயங்கி வருவதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது. “பாஜக ஆட்சிக்கு வந்த போது மாவோயிஸ்ட்களை அதிகம் உள்ள பகுதிகளில் பிரச்சனையை தீர்க்க புதிய திட்டம் வகுக்கப்படும் என ராஜ்நாத் சிங் கூறினார். புதிய திட்டம் எங்கே? ஏன் தலைமை இல்லாமல் மத்திய ரிசர்வ் போலீஸ் படை இயங்கி வருகிறது?,” என எல்லை பாதுகாப்பு படையின் முன்னாள் இயக்குனர் ஜெனரல் பிரகாஷ் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், மாநில உளவுத்துறை செயல்படாமல் இருப்பதும் பாதுகாப்பு படை வீரர்கள் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்சனை என்கிறார்கள். “ஆயுதம் தாங்கிய 300 பேர் இந்தத் திடீர் தாக்குதலை நடத்தி இருக்கின்றனர் இது குறித்து மாநில உளவுத்துறை அறியாதது ஏன்?,” என உத்தரப்பிரதேச முன்னாள் காவல் தலைவர் விக்ரம் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சத்தீஸ்கர் முதலமைச்சர் ராமன் சிங் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த தாக்குதல் கோழை தனமானது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.