தின்கேஷ் கவிஷிக் Facebook
இந்தியா

மனவலிமையால் எவரெஸ்ட் ஏறி சாதனை படைத்த மாற்றுத்திறனாளி!

தனது இரண்டு கால்கள் மற்றும் ஒரு கையை இழந்த நிலையில், எவரெஸ்ட் சிகரத்தின் மலையடி வாரத்தை தொட்ட 30 வயது இளைஞர்...சாதித்தது எப்படி? விவரிக்கிறது இந்த தொகுப்பு.

ஜெனிட்டா ரோஸ்லின்

ஹரியானாவை சேர்ந்தவர் தின்கேஷ் கவிஷிக், வயது 30. இவருக்கு 9 வயது இருக்கும்போது, ஏற்பட்ட விபத்தின் காரணமாக தனது இரண்டு கால்கள், மற்றும் ஒரு கையை இழந்துள்ளார். இருப்பினும் மனம் தளராத தின்கேஷ், தனது பெற்றோர்களுடன் கோவாவிற்கு குடி பெயர்ந்துள்ளார்.

அங்கு சென்று உடற்தகுதி பயிற்சியாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற முனைப்போடு செயற்கை கை, கால்களை பொருத்திக் கொண்ட அவர், எப்படியாவது எவரெஸ்ட் சிகரம் ஏறிவிட வேண்டும் என்று பயிற்சிகளையும், அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த மே 11-ஆம் தேதி கடல் மட்டத்தில் இருந்து 17, 598 அடி உயரத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தின் மலையடி வாரத்தை எட்டி பிடித்துள்ளார். தான் உடற்தகுதி பயிற்சியாளராக இருப்பதால் தனக்கு இது சிறிது எளிமையாக இருக்கும் என எண்ணியுள்ளார் தின்கேஷ். ஆனால், அது மிகப்பெரிய சவாலாக இருந்தது என்று அவரே தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து அவர் தெரிவிக்கையில், “ மலையேறுவதில் எனக்கு எந்த பயிற்சியும் இல்லை. நான் ஒரு உடற்தகுதி பயிற்சியாளர் என்பதால் மலையேறுவது எளிதாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், அது எனக்கு மிகவும் சவாலாக இருந்தது.

மேலும் ,எவரெஸ்ட் சிகரம் ஏறும்போது உடல்நிலை மோசமாக இருந்துது. நான் கடுமையான மலைப்போரில் (நோயால்) பாதிக்கப்பட்டேன். இருப்பினும், அதை நான் செய்து முடிக்க வேண்டும் என்ற மனவலிமை எனக்குள் இருந்தது. எனது மனவலிமைதான் தற்போது இதை செய்யவும் வைத்துள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இவரின் வெற்றிக்கு கோவாவில் உள்ள மாற்றுத்திறனாளிகள் சங்கம் தனது பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளது குறிப்பிடட்த்தக்கது.

மேலும், மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த காம்யா கார்த்திகேயன் என்ற 16 வயது சிறுமியும் எவரெஸ்ட் மலைச்சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் , உலகிலேயே இரண்டாவதாக வயது குறைந்தவர் இச்சாதனையை படைத்துள்ளார்.