இந்தியா

சபரிமலை கோயிலுக்குள் நுழைய தயாராக இருக்கும் 30 இளம் பெண்கள் !

சபரிமலை கோயிலுக்குள் நுழைய தயாராக இருக்கும் 30 இளம் பெண்கள் !

rajakannan

சர்ச்சைகளுக்கு நடுவே சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைய பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 30 பெண்கள் திட்டமிட்டுள்ளனர்.

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பை அடுத்து சில பெண்கள் சபரிமலைக்கு செல்ல முயன்றனர். பக்தர்களின் எதிர்ப்பு காரணமாக அவர்கள் உள்ளே நுழைய முடியாமல் திரும்பிவிட்டனர். சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் நுழைவதற்கு கேரள பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியதோடு, கேரள சட்டசபையையும் முடக்கி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு, மத்திய பிரதேசம், ஒடிசா, கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களைச் சேர்ந்த 20-30 வயதுடைய இளம் பெண்கள் வருகின்ற டிசம்பர் 23 ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) சபரிமலைக்கு செல்ல உள்ளனர். தரிசனத்திற்கு முன்பாக அவர்கள் 5 நாட்கள் விரதம் மற்றும் பூஜைகள் செய்ய திட்டமிட்டுள்ளனர். 

இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த மனிதி என்ற பெண்கள் அமைப்பைச் சேர்ந்த செல்வி கூறுகையில், “இதுவரை சில பெண்கள் சபரிமலை கோயிலுக்கு செல்ல முயற்சித்துள்ளனர். ஆனால், எல்லா முயற்சிகளும் தோல்வி அடைந்துள்ளது. அவர்கள் தனிப்பட்ட நபர்களாக முயற்சி செய்கிறார்கள். ஆனால், நாங்கள் ஒரு குழுவாக செல்ல திட்டமிட்டுள்ளோம். பாதுகாப்பு கேட்டு கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளோம். எங்களது கோரிக்கை கேரள போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, பினராயி விஜயன் அலுவலகத்தில் இருந்து பதில் வந்துள்ளது” என்றார். 

“தற்போது வரை, யார்? யார்? செல்கிறார்கள் என்ற பெயர்களை வெளியிடவில்லை. போலீசாரின் உதவி இல்லாமல் சபரிமலை கோயிலுக்குள் எங்களால் செல்ல முடியாது. நாடு முழுவதும் இருந்து வரும் பெண்களுக்கு கேரள போலீசார் பாதுகாப்பு அளிப்பார்கள் என்று நம்புகிறோம்” என்கிறார் கேரளாவின் வயநாடில் உள்ள ஆதிவாசி பெண்கள் அமைப்பின் அம்மணி.