உத்தராகண்ட் முகநூல்
இந்தியா

உத்தராகண்ட்|நிலச்சரிவில் சிக்கி ஊர் திரும்ப இயலாமல் தவிக்கும் 30 தமிழர்கள்!

உத்தராகண்ட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதைகள் அடைபட்டு 30 தமிழர்கள் சிக்கித்தவித்து வரும் நிலையில், அவர்களை மீட்க, அம்மாநில அரசுடன் இணைந்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது

PT WEB

உத்தராகண்ட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதைகள் அடைபட்டு 30 தமிழர்கள் சிக்கித்தவித்து வரும் நிலையில், அவர்களை மீட்க, அம்மாநில அரசுடன் இணைந்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஆதி கைலாஷ் பகுதிக்கு கடலூரை சேர்ந்த 30 பேர் ஆன்மீக சுற்றுலாவுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில், அங்கு ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக மலைப்பாதையில் கற்களும் மண்ணும் குவிந்துள்ளன. இதனால், மலையில் இருந்து கீழே இறங்க முடியாமல் பக்தர்கள் சிக்கித்தவிக்கின்றனர்.

அவர்கள் அனைவரும் அருகில் உள்ள கிராமத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக கிடைக்கின்றதா என்பது தெரியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, உத்தரகண்ட் மாநிலத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க அந்த மாநில அரசுடன் இணைந்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, நிலச்சரிவு நிகழ்ந்த பித்தோர்கர் மாவட்ட ஆட்சியரை தொடர்புகொண்டு கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தமிழர்களை மீட்பது குறித்து பேசியுள்ளார்.

மேலும், “நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் வானிலை சீரானதும், ஹெலிகாப்டர்கள் மூலம் 30 தமிழர்களும் மீட்கப்படுவார்கள்.” என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனால், அங்கு சிக்கியுள்ளவர்களின் உறவினர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.