உத்தராகண்ட் நிலச்சரிவில் தமிழர்கள் மீட்பு புதிய தலைமுறை
இந்தியா

உத்தராகண்ட் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்களும் பத்திரமாக மீட்பு! மீட்கப்பட்டது எப்படி?

PT WEB

உத்தராகண்ட் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புனித தலங்களுக்கு சென்ற பக்தர்கள் பலரும் அருகே இருக்கும் ஆசிரமங்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இந்நிலையில் தவாகட் - தானக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் செப்டம்பர் 14ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இதில்தான் தமிழர்கள் 30 பேர் சிக்கிக் கொண்டனர்.

உத்தராகண்ட் நிலச்சரிவு

உத்தராகண்ட்டில் உள்ள ஆதி கைலாஷ் பகுதிக்கு, தமிழகத்தைச் சேர்ந்த 12 பெண்கள் உள்பட 30 பேர் புனிதப் பயணம் மேற்கொண்டனர். இவர்களுள் 28 பேர் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்தவர்கள். இருவர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்தவர்கள்.

சென்னையில் இருந்து ரயில் மூலமாக உத்தராகண்ட் சென்ற அவர்கள், ஆதி கைலாஷ் சென்றுவிட்டு திரும்பும் போது, நிலச்சரிவு ஏற்பட்டதால் தவாகாட் பகுதியில் சிக்கிக் கொண்டனர். சாலையில் விழுந்த பாறைகள், மண் மற்றும் கற்களை அகற்றி சாலை போக்குவரத்தை மீண்டும் துவங்க பல நாட்கள் ஆகலாம் என்று அறிவிப்பு வெளியானதால் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

உத்தராகண்ட் நிலச்சரிவு

பின்னர், போதி என்ற இடத்தில் தஞ்சமடைந்த 30 பேரும், அங்கிருந்தபடி உதவி வேண்டி தமிழக அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டனர். நடுவழியில் சிக்கிக்கொண்ட தமிழர்கள், கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமாருக்கு தொலைபேசி மூலம் தெரிவித்தனர். அவர் பித்தோரகர் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு சிக்கியுள்ள தமிழர்களை உடனடியாக மீட்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

இதைத்தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் மீட்பு நடவடிக்கையை துரிதப்படுத்தினார். தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 2 கட்டமாக ஹெலிகாப்டர்கள் மூலம் 30 தமிழர்களையும் மீட்டனர். பாதுகாப்பாக உள்ள தமிழர்களுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், அனைவரும் நலமுடன் ஊருக்கு திரும்ப அனைத்து உதவிகளையும் செய்து வருவதாக தெரிவித்தார். புனிதப் பயணம் மேற்கொண்ட 30 பேரும் தற்போது பாதுகாப்பாக மீட்கப்பட்டு தர்ச்சுலா என்ற இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தேவையான அனைத்து வசதிகளையும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்துள்ளது. அனைவரும் விரைவில் தமிழகம் வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.