இந்தியா

30 நிமிட சேஸிங்... நடுரோட்டில் துப்பாக்கிச் சண்டை: பிரபல ரவுடியை மடக்கிய போலீஸ்!

webteam

பிரபல ரவுடியை 30 நிமிடம் துரத்தி, துப்பாக்கியால் சுட்டு போலீசார் மடக்கிப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில், ஜூன் 26 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் விகாஸ் சவுத்திரி மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். டெல்லியிலும் ஹரியானாவிலும் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலையை செய்ததாக சச்சின் கெரி (35) என்பவரை போலீசார் தேடி வந்தனர்.  

(விகாஸ் சவுத்ரி)

இந்நிலையில் நேற்று நள்ளிரவு ஃபரிதாபாத் பகுதியில் கெரி சுற்றுவதாக வந்த ரகசிய தகவலை அடுத்து பல்வால் மற்றும் ஃபரிதாபாத் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். அந்த பகுதியில் சென்ற வாகனங்களை சோதனையிட்டனர். அப்போது வந்த பைக் ஒன்றை நிறுத்துமாறு போலீசார் கூறியபோது, நிற்காமல் வேகமாக சென்றது. சந்தேகமடைந்த போலீசார் பைக்கை விரட்டிச் சென்றனர். பைக்கில் இருந்த நபர், போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தொடர்ந்து பைக்கில் பறந்தார். சுமார் 30 நிமிடம் அங்கும் இங்கும் விரட்டிச் சென்ற போலீசார், தற்காப்புக்காக அவர் மீது துப்பாக்கியால் சுட்டனர். அதில் இருந்து தப்பியபடி அவர் சென்றார். பின்னர் அவர் காலில் குண்டு தாக்கியதை அடுத்து கீழே விழுந்தார். 

(கே.கே.ராவ்)

போலீசார் அவரை மீட்டு விசாரித்தனர். அவர்தான் போலீசார் தேடிக் கொண்டிருந்த பிரபல ரவுடி சச்சின் கெரி என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் மருத்துவமனையில் சிகிசைக்காகச் சேர்த்தனர். 

இத்தகவலை செய்தியாளர்களிடம் கூறிய பரிதாபாத் போலீஸ் கமிஷனர் கே.கே.ராவ், சச்சின் கெரி, பிரபல தாதா கவுசல் என்பவனின் வலது கை என்றும், கொலை, கடத்தல், பணம் பறிப்பு உட்பட 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் அவன் மீது உள்ளது என்றும் தெரிவித்தார்.

பல்வால் எஸ்.பி, நரேந்தர் பிஜார்னியா கூறும்போது, ’’ஹரியானா காங்கிரஸ் தலைவர் விகாஸ் சவுத்ரியிடம் ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டுள்ளனர். அவர் தர மறுத்ததால் சுட்டுக் கொன்றுள்ளனர். அதை செய்தது கெர்தான். 2012 ஆம் ஆண்டில் இருந்தே போலீஸ் கண்ணில் இருந்து தப்பியவன், இப்போது சிக்கியுள்ளான்’ என்றார்.