இந்தியா

நான்காம் கட்ட ஊரடங்கில் கவனம் கொள்ள வேண்டிய 30 நகரங்கள்... தமிழகத்தில் மட்டும் 6!!

நான்காம் கட்ட ஊரடங்கில் கவனம் கொள்ள வேண்டிய 30 நகரங்கள்... தமிழகத்தில் மட்டும் 6!!

webteam

இந்தியாவை கொரோனா கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. இதுவரை 85ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 30ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் நேற்று மட்டும் 477 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,585 ஆக அதிகரித்துள்ளது.

இதில் சென்னையில் மட்டும் நேற்று 332 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 74 பேர் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் இதுவரை 3,538 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவில் 80% கொரோனா 30 நகராட்சி பகுதிகளில் இருந்தே வந்துள்ளதாக சுகாதாரத்துறை கணித்துள்ளது. இதனால் அடுத்தக்கட்ட ஊரடங்கில் இந்தக் குறிப்பிட்ட 30 இடங்களிலும் தளர்வுகள் குறைக்கப்படாமல் கண்காணிப்பு தொடரலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த 30 இடங்களை கவனமாக கையாளுமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளதாக தெரிகிறது.

ஆந்திரா, டெல்லி, குஜராத், மத்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா,ஒடிசா, பஞ்சாப்,ராஜஸ்தான், தமிழ்நாடு,தெலங்கானா, மேற்கு வங்கம்,உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 30 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர்,கடலூர்,செங்கல்பட்டு, அரியலூர்,விழுப்புரம் உள்ளிட்ட இடங்கள் கவனமாக கையாளவேண்டிய இடங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நான்காம் கட்ட ஊரடங்கில் இந்தக் குறிப்பிட்ட பகுதிகளை அதிக கவனத்துடன் கையாள வேண்டுமென சுகாதாரத்துறை மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது.