இந்தியா

பானைக்குள் சிக்கியது குழந்தையின் தலை: பத்திரமாக மீட்டது தீயணைப்புத் துறை!

webteam

கேரளாவில் 3 வயது குழந்தையின் தலைக்குள் பானை மாட்டிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பிரவம் (Piravam) என்ற ஊரைச் சேர்ந்தவர் ஆபிரஹாம். இவர் மனைவி ஜிஜி. இவர்கள் மகன் பியான். வயது 3. வழக்கம் போல வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தான், பியான். அப்போது அருகில் ஈயப்பானை ஒன்று இருந்தது. தவழ்ந்து சென்ற பியான் அதை வைத்து விளையாடிக் கொண்டிருந்தான். ஜாலியாக விளையாடிக் கொண்டிருந்தவன், திடீரென்று பானையை தலையில் கவிழ்த்தினான். பிறகு அவனால் அதை எடுக்க முடியவில்லை. 

இதனால் அழுதான். குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டு ஓடிவந்த அம்மா ஜிஜி, பானையை மண்டையில் இருந்து எடுக்க முயன்றார். முடியவில்லை. அக்கம் பக்கத்து வீட்டினரும் ஓடி வந்து பானையை எடுக்க போராடினர். முடியாததால் அவர்கள் பீதி அடைந்தனர். 

பியான் தொடர்ந்து அழுதுகொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த அதே ஊரைச் சேர்ந்த ஜோஜின் என்பவர், பியானை தீயணைப்பு துறை அலுவலகத்துக்கு கூட்டிச் சென்றார். அங்கு வீரர்கள் கத்திரியால் பானையை வெட்டி, பியானை மீட்டனர். பிறகுதான் அழுகையை நிறுத்தினான் பியான்.

இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதாக, மலையாள மனோரமா செய்தி வெளியிட்டுள்ளது.