இயர்போன் மாட்டிக்கொண்டு வெவ்வேறு தண்டவாளங்களில் நடந்துசென்ற 3 பேர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ளது.
ரயில்வே பாதுகாப்பு துறை இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அதில் இரண்டு பேர் பதோஹி ரயில் நிலையத்தில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தனர். மற்றொரு நபர் அஹிமன்புர் ரயில்நிலையத்தில் அடிபட்டு உயிரிழந்தார். இதில் மூன்று பேரும் இரவு உணவுக்குப்பிறகு சிறிது நடந்து சென்றவர்கள் என்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பதோஹி ரயில்நிலைய ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) அவுட்போஸ்ட் பொறுப்பாளர் அஷோக்குமார் சிங் கூறுகையில், ’’இறந்தவர்களில் கிருஷ்ணா என்கிற பங்காலி(20) மற்றும் அவரது நண்பர் மோனு(18) இருவரும் ஜலால்பூர் சிவில் லைன்ஸ் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டவர்கள்.
இவர்கள் இருவரும் ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள ரயில் பாதையின் நடுவில் பிளாட்பாரம் எண் 2 க்கு முன்பாக இயர்போன்களை போட்டுக்கொண்டு நடந்துசென்றபோது ரயில் மோதியுள்ளது. அவர்கள் வீடு திரும்பாததை அடுத்து அவர்கள் குடும்பத்தார் தேடியபோது இறந்துகிடந்த உடல்களை கண்டுபிடித்துள்ளனர்.
வாரணாசி - அலகாபாத் ரயில் பாதையில் சென்றுகொண்டிருந்த பங்கஜ் துபே(30) என்ற நபர் இயர்போன் போட்டுக்கொண்டு ரயில் வருவதை கவனிக்காமல் சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த பயணிகள் ரயில் அவர்மீது மோதி தூக்கி வீசப்பட்டார். இந்த ரயில்பாதை தால்பாத்புர் கிராமத்தின் அஹிமன்புர் ரயில் நிலையத்துக்கு உட்பட்டது’’ என்று கூறியுள்ளார்.