இந்தியா

பிரபல தாதா ரவி புஜாரி கைதுக்கு சொந்தம் கொண்டாடும் 3 மாநிலங்கள்!

பிரபல தாதா ரவி புஜாரி கைதுக்கு சொந்தம் கொண்டாடும் 3 மாநிலங்கள்!

webteam

பிரபல தாதா ரவி புஜாரி செனகல் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதற்கு மூன்று மாநிலங்கள் சொந்தம் கொண்டாடுகின்றன.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் ரவி புஜாரி. மும்பையில் தாவூத் இப்ராஹிமுடன் இணைந்து சில காலம் செயல்பட்ட அவர், பின்னர் சோட்டா ராஜனுடன் சேர்ந்தார். பிறகு, தனியாக சமூக விரோத செயல்களில் செயல்பட்டு வந்த இவர், கட்டுமான அதிபர்கள், திரைத்துறையினரை மிரட்டி பணம் பறித்து வந்தார். கொலை, கொள்ளை வழக்குகளும் இவர் மீது உள்ளது. வெளிநாட்டில் தலைமறைவாக வாழ்ந்து வந்தார். அவரது கூட்டாளிகள் இங்குள்ள தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தனர். சமீபத்தில் கேரள நடிகையின் பியூட்டி பார்லர் கூட இவரது கூட்டாளிகளால் தாக்கப்பட்டது.

சில ஆண்டுகளுக்கு முன், இந்தி பட இயக்குனர் மகேஷ் பட்டுக்கு ரவி புஜாரி பெயரில் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுதொடர்பாக அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ரவி புஜாரி கூட்டாளிகள், சிலரை மும்பை போலீசார் கைது செய்திருந்தனர். 

இந்நிலையில் செனகல் நாட்டில் ரவி புஜாரி கைது செய்யப்பட்டுள்ளார். அங்குள்ள ஓட்டல் ஒன்றுக்கு வந்த அவரை அந்த நாட்டு போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரை இந்தியா கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் இவரை கைது செய்ய தாங்கள்தான் காரணம் என மூன்று மாநிலங்கள் சொந்தம் கொண்டாடுகின்றன. மும்பை போலீசாரும் குஜராத் போலீசாரும் தங்களுக்கு கிடைத்த தகவலின் படிதான் அவர் கைது செய்யப்பட்டார் என்று கூறிவருகின் றனர். இந்நிலையில் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, ’அவர் கைது செய்யப்பட்டு இருப்பதில் கர்நாடகக் கூட்டணி அரசின் பங்கு முக்கியமானது என்றும், மாநிலத்தில் கூட்டணி ஆட்சிக்கு வந்த பின்பு எடுக்கப்பட்ட நடவடிக்கையால் ரவி பூஜாரி கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறி இருந்தார்.

இதுதொடர்பாக, கர்நாடக பாஜக ட்விட்டர் பக்கத்தில், ‘’ரவி பூஜாரி கைது விவகாரத்தை நீங்களே கூறி, உங்களுக்குள் பெருமைப்பட்டு கொள்கிறீர்கள். காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆனந்த் சிங்கை, அதே கட்சியின் கம்பிளி எம்.எல்.ஏ. கணேஷ் தாக்கிவிட்டு தலைமறைவாக உள்ளார். அவரை கைது செய்யாதது ஏன்? அவரை கைது செய்வதில் ஆர்வம் காட்டுங்கள்’’ என்று கூறப்பட்டுள்ளது .