ஆசிட் வீச்சு மாதிரிப் படம்
இந்தியா

டெல்லியில் அகதிகள் மீது ஆசிட் தாக்குதல்: 11 மாத குழந்தை உட்பட 3 அகதிகள் படுகாயம்; ஒருவர் கைது!

Jayashree A

டெல்லியிலுள்ள விகாஸ்புரி பகுதியில் UNHRC (United Nations High Commissioner for Refugees) அலுவலகம் உள்ளது. அங்கு சில அகதிகள் தங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக வேலை கேட்பதுடன், உரிய தங்குமிடமும் கேட்டு பல கோரிக்கைகளை அவ்வபோது முன்வைத்து வந்துள்ளனர். சில நேரங்களில் கோஷங்களும் எழுப்பியதாக கூறப்படுகிறது.

UNHCR vikaspuri

அப்படி கடந்த செப்டம்பர் 30ம் தேதி அகதிகள் சிலர் UNHRC அலுவலகம் சென்று வேலை கேட்டு கோஷம் எழுப்பியுள்ளனர். அச்சமயத்தில் அகதிகளுக்கும் உள்ளூர்வாசிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக இதுதொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு செல்வதற்கு முன்பு, உள்ளூர்வாசியான ராகேஷ் குமார் என்பவர், ஆசிட் நிரம்பிய கேனை அகதிகள் முகாம் மீதும், அங்கிருந்த அகதிகள் மூவர் மீதும் வீசியுள்ளார். இதில், சிரிய நாட்டைச் சேர்ந்த அகதி ஒருவரும், அவரது 11 மாத ஆண் குழந்தை ஒன்றும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆசிட் வீச்சால் காயமடைந்த மூவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர். இவர்களில் பச்சிளம் குழந்தை இன்று டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

மேலும் இதுகுறித்து காவல்துறையினர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், “சம்பவ இடத்திற்கு வேலை, தங்குமிடம் கேட்டு அகதிகள் அவ்வப்போது சென்று நேரில் கோரிக்கை வைத்து வந்துள்ளனர். அதில் சில நேரங்களில் அகதிகள் கோஷங்களை எழுப்பியதாக தெரிகிறது. அது, அப்பகுதி மக்களுக்கு தொந்தரவாக தெரிந்துள்ளது.

சம்பவ தினத்தன்று அகதிகளுக்கும், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் வாசிகளும் இதில் உள்ளே வந்துள்ளனர். இதன் நீட்சியாக இச்சம்பவம் நடந்திருப்பதாக தெரிகிறது. மேலும் அந்த அமிலம் ஃபெனாயில் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் அதில் இருந்த கெமிக்கல் அளவு இன்னும் தெரியவில்லை. அதுபற்றி ஆய்வு செய்யப்படுகிறது” என்றுள்ளனர்.

இந்த விவகாரத்தில் உள்ளூர்வாசியான ராகேஷ் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து அக். 1ம் தேதி கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

acid attack

இதில் பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தை, சம்பவத்தின்போது தங்களுக்கு உதவ பலரும் முன்வரவில்லை என்றும், ஒரு குழந்தைக்கு இதைச் செய்ய எப்படி ஒருவருக்கு மனம் வந்ததும் என்றும் உள்ளூர் ஊடகங்களில் கேட்டிருக்கிறார்.