உயிரிழந்தவர்கள் pt web
இந்தியா

புதுவை| 3 பேரின் உயிரைக் குடித்த விஷவாயு.. கழிவறை கூட செல்லாமல் உயிர் அச்சத்துடன் வாழும் மக்கள்!

PT WEB

கழிவறைக்குள் கசிந்த விஷவாயு

ரெட்டியார்பாளையத்தில் கழிவறைக்குள் விஷவாயு தாக்கியதில் 15 வயது சிறுமி செல்வராணி, மூதாட்டி செந்தாமரை, அவரது மகள் காமாட்சி மூவரும் உயிரிழந்ததால் ஏற்பட்ட அசாதாரண சூழல் இன்னும் மாறவில்லை. மூன்று பேரின் உடல்களும் உடற்கூராய்வுக்குப்பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இவர்களின் உடலுக்கு அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.

சிறுமி செல்வராணியின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. பின்னர், செந்தாமரை, காமாட்சி உடல்களுக்கும் இறுதி மரியாதைசெய்த பின், அவர்களின் வழக்கப்படி பவழக்காரன்சாவடி சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. இந்த மூன்று உயிர்களும் பறிபோன நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறுகிறார்.

அமைச்சர் நமச்சிவாயம் இதுதொடர்பாக கூறுகையில், “உரிய விசரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விசாரணையின் முடிவில் யார் இதற்கு காரணமானவானவர்களோ அவர்கள் மேல் உரிய நடவடிக்கையை இந்த அரசாங்கம் எடுக்கும்” என தெரிவித்துள்ளார். ஆனால் மக்களிடம் அச்சம் பரவியுள்ளது. விஷவாயு கசிந்து 3 பேர் உயிரிழந்ததால் வீட்டுக்குள் அச்சத்துடன் இருக்கிறார்கள் மக்கள். கழிவறை பக்கமே செல்லாமல் இருப்பதாக இவர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

உடற்கூராய்வு அறிக்கை வந்தபின் விசாரணை மாறுமா?

அப்பகுதியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் கூறுகையில், “சற்று பயமாக இருக்கிறது. சமைக்கக்கூடாது என சொல்லிவிட்டார்கள். பின் மீண்டும் சமைக்கலாமா வேண்டாமா என எதுவும் சொல்லவில்லை. அருகில் இருப்பவர்களைக் கேட்டால் சமைக்கலாம் என்கிறார்கள். இருந்தாலும் ஒரு பயம்” என தெரிவித்துள்ளார்.

அமைச்சர் நமச்சிவாயம்

மூன்று பேரின் உயிரிழப்பால் அங்கு அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், மக்களின் கோரிக்கையை ஏற்று இப்பகுதிக்கு அருகேவுள்ள கழிவுநீர் வாய்க்கால் சுத்தகரிப்பு செய்யும் நிலையத்தில் சுத்தகரிப்பு செய்யும் பழைய ஒப்பந்தக்காரை நீக்கிவிட்டு, லாஸ்பேட்டை கழிவு நீர் சுத்தகரிப்பு செய்யும் ஒப்பந்தக்காரை நியமித்து சுத்தகரிப்பு செய்யும் பணி நடைபெற்று வருகின்றது. பொதுமக்கள் போராட்டத்திற்கு பிறகு அப்பகுதியில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் மற்றும பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மூவரின் உயிரிழப்பு சம்பவத்தையொட்டி ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் மரணம் என்ற பிரிவின் கீழ் இரண்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளது. மூவரின் உடற்கூறாய்வு அறிக்கை வந்த பின்னரே மேற்கொண்டு வழக்கின் தன்மை மாறுமா என்பது தெரியவரும்.

இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க, கழிவுநீர் தொடர்பான புகார்களை, பொதுப்பணித்துறை அலுவலகத்தில் செயல்படும் 'அவசர கழிவுநீர் நடவடிக்கை குழுவின் "14420" என்ற கட்டணமில்லா தொலைபேசியை தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு புதுச்சேரி அரசு உள்ளாட்சித்துறை கேட்டுக்கொண்டுள்ளது. இப்போது அரசால், அவசர அவசரமாக எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் படிப்படியாக முன்பே செய்திருந்தால் மூவரின் உயிரைக்காப்பாற்றி இருக்கலாம்.