இந்தியா

நிமோனியா நோய்க்கு கொடூர சிகிச்சை - மூடநம்பிக்கையால் 3 மாத குழந்தை பலியான சோகம்

நிமோனியா நோய்க்கு கொடூர சிகிச்சை - மூடநம்பிக்கையால் 3 மாத குழந்தை பலியான சோகம்

JustinDurai

நிமோனியாவால் பாதிக்கப்பட்ட 3 மாத குழந்தையின் வயிற்றில் சூடான இரும்பு கம்பியை கொண்டு 51 முறை குத்தப்பட்டிருக்கிறது.

மத்தியப் பிரதேசம் மாநிலம் ஷாதோல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பழங்குடி மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இக்கிராமத்தில் உள்ள 3 மாத பெண் குழந்தை ஒன்றுக்கு நிமோனியா நோய் ஏற்பட்டுள்ளது. நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வயிற்றில் சூடான இரும்பு கம்பி அல்லது பாட்டிலை கொண்டு குத்தினால் அந்நோய் குணமாகிவிடும் என்கிற நம்பிக்கை இக்கிராம மக்களிடையே நிலவுவதாகக் கூறப்படுகிறது.

அதன்படி நிமோனியாவால் பாதிக்கப்பட்ட அந்த 3 மாத குழந்தையின் வயிற்றில் சூடான இரும்பு கம்பியை கொண்டு 51 முறை குத்தி எடுத்திருக்கிறார்கள். இதனால் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படவே , அதன்பிறகே மருத்துவமனையில் காண்பித்துள்ளனர். அங்கு 15 நாட்களாக குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும், சிகிச்சைப் பலனின்றி அக்குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

இச்சம்பவம் தொடர்பாக ஷாஹோல் மாவட்ட ஆட்சியர் வந்தனா வைத் கூறுகையில், ''உள்ளூர் அங்கன்வாடி பணியாளர் ஒருவர் குழந்தையின் பெற்றோரிடம் சூடான கம்பியால் குத்த வேண்டாம் என அறிவுரை வழங்கியிருக்கிறார். ஆனால் அவர்கள் அதை பொருட்படுத்தவில்லை. இதுகுறித்து அறிந்ததும் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை ஊழியர்கள் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதற்கு முன்புவரை குழந்தைக்கு நிமோனியாவுக்கான சிகிச்சை எதுவும் அளிக்கப்படவில்லை. இதனால் குழந்தையின் உடல்நிலை மோசமடைந்தது. மக்களிடையே நிலவும் இந்த மூட நம்பிக்கைகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்" என்று கூறினார்.