இந்தியா

இ.எம்.ஐ (EMI) பற்றி ஆர்பிஐ சொன்னது என்ன ? வல்லுநர்களின் விளக்கம்

இ.எம்.ஐ (EMI) பற்றி ஆர்பிஐ சொன்னது என்ன ? வல்லுநர்களின் விளக்கம்

webteam

வங்கியில் கடன் பெற்றவர்களிடம் மாதத் தவணை கட்டணத்தை 3 மாதங்களுக்கு வசூலிக்க வேண்டாம் என அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

ரிசர்வ் வங்கி சார்பில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவ்வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, கொரோனா வைரஸ் நெருக்கடியை மக்கள் மற்றும் தொழில் முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் வகையில் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் முக்கிய அறிவிப்பாக 3 மாதங்களுக்கு மாதாந்திர தவணையை கடனாளிகள் செலுத்த வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ரிசர்வ் வங்கியின் அறிவிப்பில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர். அதற்கு பொருளாதார வல்லுநர்களும், வங்கிகளின் இயக்குநர்களும் விளக்கமளித்து வருகின்றனர். அதேசமயம் ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு கடனாளர்களை பொறுத்தும், கடன் கொடுத்த நிறுவனங்களை பொறுத்தும் மாறுபடும் எனவும் கூறப்படுகிறது.

என்ன சொன்னது ஆர்பிஐ ?

ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில், அனைத்து வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், சிறு நிதி நிறுவன வங்கிகள் மற்றும் உள்ளூர் வங்கிகள், கிராமப்புற வங்கிகள், அனைத்திந்திய நிதி நிறுவனங்கள், மைக்ரோ நிதி நிறுவனங்கள், வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனங்கள் உட்பட அனைத்துமே அடுத்த மூன்று மாதத்திற்கு கடன் பெற்றவர்களிடம் மாதத் தவணை வசூலிக்கக்கூடாது என குறிப்பிட்டுள்ளது. அத்துடன் கடனாளர்களுக்கு மூன்று மாதங்களுக்குப் பின்னரே மீண்டும் மாதத்தவணைகள் தொடங்கும் எனவும் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.

இம்.எம்.ஐ கட்டவில்லை என்றால் சிபில் ஸ்கோர் பாதிக்குமா?

அதேசமயம் பொருளாதார வல்லுநர்கள் கூறும்போது, மத்திய அரசின் அறிவிப்பன்படி 3 மாதம் தவணை செலுத்தாத கடனாளர்களுக்கு கிரெடிட் ஸ்கோர் அல்லது சொத்து மதிப்பு குறைப்போ இருக்காது என்கின்றனர். 3 மாதங்களுக்கு தவணைகள் தற்காலிமாக நிறுத்தப்பட்டு, பின்னர் அது தவணை காலத்தில் நீட்டிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று மாதத்திற்கு வங்கிகள் வட்டி வசூலிக்குமா ? 

இந்த மூன்று மாதத்திற்கு வங்கிகள் வட்டி வசூலிக்குமா ? என்பதையும், 3 மாத தவணைக்கான வட்டியை ஒரே முறையாக செலுத்த வேண்டுமா ? அல்லது அதையும் இ.எம்.யு உடன் பிரித்து செலுத்தலாமா ? என்பதை வங்கிகள் தெளிவுபடுத்த வேண்டும் எனக் அறிவுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக சென்ட்ரல் வங்கி ஆளுநர் எகனாமிக்ஸ் டைம்ஸ்க்கு கூறியுள்ள கருத்தில், மத்திய அரசின் இந்த மாதந்திர தவணை ஒத்திவைப்பு திட்டம் கொரோனா வைரஸால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை குறைக்க தான் என கூறியுள்ளார். எனவே மத்திய அரசு அறிவுறுத்தல் எதையும் மாற்றாமல் அப்படியே அனைத்து நிதி நிறுவனங்களும் கடனாளர்களிடம் நடந்து கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளார். உத்தரவை மீறி அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனங்கள் மாதத்தவணை வசூலித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

எஸ்.பி.ஐ தலைவர் ராஜ்னிஷ் குமார் எக்னாமிக்ஸ் டைம்ஸிடம் பேசுகையில், அனைத்து ஆணையத்தையும் சேர்ந்த வங்கிகளின் கடனாளர்களது மாதந்திர தவணையும், 3 மாதத்திற்கு அதுவாகவே ஒத்திவைக்கப்பட்டுவிடும் என்றார். ஆனால் ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு கிரெடிட் கார்டு தவணைகளுக்கும் பொருந்துமாக என்பதை தெளிவு படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையே ஆர்.பி.ஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில் நிதி வசூலிக்கும் நிறுவனங்கள் இந்த மூன்று மாதங்களில் கடனாளர்கள் யாரிடமாவது மாதத்தவணை வசூலித்தால், கடனாளிகளின் கணக்கு விபரங்களை பார்த்து அதன் அடிப்படையில் நிதி வசூலித்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

பேங்க் பசார் தலைமை இயக்குநர் அடில் ஷெட்டி கூறுகையில், கடனாளர்கள் மாதத்தவணை செலுத்தாமல் இருந்தாலும் அதற்கான தொகையை முடிந்தவரை செலவு செய்யாமல் ஒதுக்கி வைத்துக்கொள்ளுங்கள், அது பின்னர் தவணையை செலுத்தும்போது உங்களுக்கு எளிமையாக இருக்கும் என அறிவுறுத்தியுள்ளார். மேலும், தவணை செலுத்தாமல் இருப்பது தங்களுக்கு ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்துமா என கடனாளர்கள் தங்களுக்கு கடன் கொடுத்தவர்களிடம் கேட்டு தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

அதேசமயம் ஆர்பிஐ அறிவுறுத்தலின் படி, 3 மாதங்கள் தவணை ஒத்திவைப்பதால் கடனாளர்கள் யாருக்கும் கிரெடிட் ஸ்கோரில் பாதிப்பை ஏற்படுத்தாது என கூறியுள்ளார். ஆனால் கிரெடிட் கார்டு தவணைகளுக்கு இது பொருந்தாது என்றும், எனவே கிரெடிட் கார்டு கடனாளர்கள் உரிய வகையில் தவணை செலுத்த நேரிடும் எனவும் கூறியிருக்கிறார்.