இந்தியா

உயிருக்குப் போராடியவர்களை காப்பாற்றாமல் செல்ஃபி எடுத்த இளைஞர்கள்

உயிருக்குப் போராடியவர்களை காப்பாற்றாமல் செல்ஃபி எடுத்த இளைஞர்கள்

webteam

சாலை விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவதை விட்டுவிட்டு செஃபி எடுப்பதில் ஆர்வம் காட்டியுள்ளார் ராஜஸ்தான் மாநில இளைஞர் ஒருவர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது பார்மெர் மாவட்டம். அந்தப் பகுதியிலுள்ள சாலை ஒன்றில் மூன்று நபர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளனர். அப்போது சற்றும் எதிர்பாராத நேரத்தில் அவர்கள் சென்ற வாகனம் பள்ளி வாகனத்தில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. அதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இருவர் படுகாயம் ஏற்பட்டு உயிருக்குப் போராட்டிக் கொண்டிருந்தனர். சாலை முழுவதும் ரத்தமாக காட்சியளித்துள்ளது. அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவாமல், கூடி நின்று எல்லோரும் வேடிக்கை பார்த்துள்ளனர்.  அந்தச் சாலை வழியே வந்த சில இளைஞர்கள் உயிருக்குப் போராடும் அவர்களைக் காப்பாற்ற முயற்சிக்காமல் செஃபி எடுத்துள்ளனர். உதவ வேண்டிய தருணத்தில் கொஞ்சமும் மனிதாபிமானமற்று செஃல்பி எடுத்து, அதனை சமூக வலைத்தளத்திலும் பதிவேற்றியுள்ளனர். இவர்களின் இந்தக் கொடூரச் செயல் பலரையும் மனம் நோக செய்துள்ளது. மேலும் அவர்களின் செய்கையை கண்டித்தும் பலர் குரல் எழுப்பி வருகின்றனர்.  

இந்த விபத்தில் சிக்கியவர்கள் பரமானந்த், ஜெம்ரா ராம்,சந்திர பிரகாஷ் எனத் தெரிய வந்துள்ளது. இவர்கள் மூவரும் குரஜாத் சிமெண்ட் தொழிற்சாலையின் பணியாளர்கள் என்பதும் வேலைக்காக ராஜஸ்தான் வந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. இது குறித்து சோஹ்தன் காவல்நிலைய அதிகாரி மனோகர், “குறைந்த பட்சம் அவர்கள் சாலையில் அடிப்பட்டு அரை மணிநேரம் வரை உயிருக்குப் போராடி உள்ளனர். ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். மற்றொருவர் மருத்துவமனையில் உள்ளார். மூன்றாவது நபரை ஜோத்பூர் மருத்துவமனைக்கு அழைத்து கொண்டு போகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.