இந்தியா

திருப்பதியில் பிரம்மோற்சவம் கோலாகலம் - குவிந்த 3 லட்சம் பக்தர்கள்

திருப்பதியில் பிரம்மோற்சவம் கோலாகலம் - குவிந்த 3 லட்சம் பக்தர்கள்

webteam

திருமலை திரு‌ப்பதி பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தங்க கருட சேவை நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.‌

தங்க கருட வாகனத்தில் எட்டு அடிநீள ஸ்ரீ‌லட்சுமி சஹஸ்ர நாம காசுமாலை அணிந்து வெளிப்பட்ட மலையப்ப சுவாமியை கண்ட ஒவ்வொருவரும் பக்தி பெருக்கில் கண்களில் கண்ணீருடனும், நெஞ்சில் பிரார்த்தனையுடனும் நின்றது ஒட்டுமொத்த திருமலையிலும் பக்தி பரவசத்தை ஏற்படுத்தியிருந்தது. கடல் அலை போல சுமார் 3 லட்சம் ‌பக்தர்கள் திருமலையில் திரண்டிருந்து, மலையப்ப சுவாமியின் கருட சேவையை கண்டனர். 

திருமலையில் ஒருபுறம் கருட சேவை நடந்து கொண்டிருக்க, தாமதமாக அலிப்பிரி வந்து சேர்ந்த பக்தர்கள், நடைபாதை வழியாக விறுவிறுவென மலையேறிய காட்சிகளையும் காண முடிந்தது. வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்ற கருட சேவையின் பாதுகாப்புக்காக சுமார் 6 ஆயிரம் காவல்துறையினரும், திருமலை திருப்பதி பாதுகாப்பு ஊழியர்களும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதேசமயம் பெருமாளை காண வந்த பக்தர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பால், தேநீர் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன‌.