தொடர் மழை காரணமாக டெல்லி பழைய ராஜிந்தர் நகரில் இயங்கிவரும் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் தண்ணீர் புகுந்ததால் நேற்று 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளே சிக்கிக்கொண்டனர். இதற்கிடையில், 3 மாணவர்களை தவிர மற்ற மாணவர்கள், வெளியில் இருந்த மாணவர்களின் உதவியுடன் வெளியேறியதாக தெரிகிறது. இதற்கிடையில் வெளியேற முடியாத இரு மாணவிகள் ஒரு மாணவர் என 3 மாணவர்களின் உடல்களும் பலமணி நேர தேடுதலுக்கு பிறகு மீட்கப்பட்டது.
இரு வாரங்களுக்கு முன்பாகவே இந்த கட்டடத்தில் வடிகால் அமைப்பு மோசமாக உள்ளதாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாணவர்கள் புகாரளித்ததாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து டெல்லியில் உள்ள அனைத்து பயற்சி மையத்தையும் ஆய்வு செய்ய உத்தர விடப்பட்டுள்ளது.
உயிரிழந்த மூன்று மாணவர்கள், உத்தர பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரேயா யாதவ், தெலுங்கானாவை சேர்ந்த தன்யா சோனி மற்றும் கேரளாவின் எர்ணாகுளத்தை சேர்ந்த நிவின் டால்வின் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதையடுத்து பயிற்சி நிறுவனம், கட்டட நிர்வாகம் மற்றும் வடிகால் பராமரிப்பு பொறுப்பாளர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை பயிற்சி மையத்தின் உரிமையாளரும் ஒருங்கிணைப்பாளரரும் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணை நடத்தப்பட்டு வருவதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மூன்று மாணவர்களின் உயிரிழப்பிற்கு நீதிகேட்டு நூற்றுக்கணக்கான மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். கரோல் பாக் மெட்ரோ ரயில் நிலையம் அருகே நீதி கேட்டு மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று இரவு 8 மணி அளவில் இந்த சம்பவம் நடந்திருந்தாலும் அரசு அதிகாரிகளோ மாணவர்களோ உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவில்லை என்ற குற்றச்சாட்டை மாணவர்கள் முன்வைக்கின்றனர்.
இந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிப்பதாக டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “இந்தியாவின் தலைநகரில் இந்த சம்பவம் நிகழ்ந்தது துரதிர்ஷ்டவசமானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. கடந்த சில நாட்களில் 7 பேர் மின்சாரம் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், தீயணைப்புத்துறையினரின் மீட்புப் பணிகளை கண்காணித்து வருவதாகவும் சக்சேனா தெரிவித்துள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில், “டெல்லியில் கட்டடத்தின் அடித்தளத்தில் தண்ணீர் தேங்கியதால் போட்டித் தேர்வர்களுக்குத் தயாராகும் மாணவர்கள் இறந்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. சில நாட்களுக்கு முன், மழையின் போது மின்சாரம் தாக்கி மாணவர் இறந்தார். பாதுகாப்பற்ற கட்டுமானம், மோசமான நகரத்திட்டமிடம், நிறுவனங்களின் பொறுப்பற்ற தன்மை ஆகிவற்றுக்கு ஒவ்வொரு மட்டத்திலும் சாமானியர்கள்தான் விலை கொடுக்கிறார்கள்” என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.