லக்னோவில் நேற்று நிலநடுக்கம் பதிவான நிலையில், அது ஏற்பட்டு அடுத்த சில மணி நேரத்தில் அங்குள்ள ஒரு அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. இதில் சுமார் 11 பேர் தற்போதுவரை மீட்கப்பட்டுள்ளட்டுள்ளனர். மூவர் உயிரிழந்துள்ளனர் என லக்னோ காவல்துறை தெரிவித்துள்ளது.
நேற்று (ஜன. 24) நேபாளில் 5.8 ரிக்டர் அளவில் பலமான நிலநடுக்கம் ஏற்பட்டிருந்த நிலையில், டெல்லியிலும் அதை சுற்றியுள்ள இடங்களிலும் அது உணரப்பட்டது. இதுதொடர்பாக தேசிய நில அதிர்வு மையம், “மதியம் 2.28 மணி அளவில் நேபாளில் 5.8 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது” என்றுள்ளது.
இதுகுறித்த உத்தரபிரதேச தலைமை இயக்குநர் குறிப்பிடுகையில், “இது இயற்கைப் பேரிடராகத் தெரிகிறது. இப்பகுதியையை ஒட்டிய இடத்தில், 5.8 தீவிர நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. மேலும் இக்கட்டிடம் ஆற்றங்கரைப் பகுதியை ஒட்டி இருந்ததாலும், அருகில் கோம்ரி நதி இருப்பதாலும், இச்சம்பவத்தை ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. கட்டிடத்தில் சில கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருந்தன. ஆனால் அவை லேசான வேலை மட்டுமே. கட்டுமான இயந்திரங்களால் நடக்கவில்லை. ஆகவே அந்த கட்டுமானப்பணிகள் காரணமாக இருக்க வாய்ப்பில்லை என தெரிகிறது.
எதுவாக இருப்பினும், அனைத்தும் விசாரணைக்கு உட்பட்டே இருக்கிறது. வல்லுநர்கள் ஆராய்ந்து வருகின்றனர். எதுவாக இருந்தாலும், விசாரணைக்கு பின் சொல்கிறோம். இன்னும் 18 மணி நேரத்துக்கு இந்த மீட்பு நடவடிக்கை தொடருமென கணித்துள்ளோம்” எனக்கூறியுள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க உ.பி முதல்வர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். துணை முதல்வர் ப்ரஜேஷ் பதக், சம்பவம் நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். அவர் தெரிவிக்கையில், “திடீரென கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. இதுவரை மூவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட மற்றவர்கள், மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். மீட்பு நடவடிக்கைகள் தொடர்கிறது” என்றுள்ளார். விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கையில் காவல்துறை இறங்கியுள்ளது.